ஒரே ஓவரில் இரு முறை மிடில் ஸ்டம்பை உடைத்தெறிந்த அர்ஸ்தீப் சிங்..! வைரல் வீடியோ
அர்ஸ்தீப் சிங்கின் பந்துவீச்சில் மிடில் ஸ்டம்ப் இருமுறை உடைந்துபோன வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
மும்பை,
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த 31-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியை பஞ்சாப் கிங்ஸ் அணி எதிர்கொண்டது.
இந்த போட்டியில் பஞ்சாப் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தி வெற்றிபெற்றது. பஞ்சாப் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தவர் அர்ஸ்தீப் சிங். அவர் நேற்றைய போட்டியில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
ஆட்டத்தின் கடைசி ஓவரில் மும்பை அணியின் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை வீசிய அர்ஷ்தீப் சிங், திலக் வர்மா (3 ரன்), நேஹல் வதேரா (0) ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன் 2 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
இந்த இரு விக்கெட்டின் போது அவரது துல்லியமான யார்க்கர் பந்துவீச்சில் ஸ்டம்பே இரண்டு முறை உடைந்துபோனது.அதுவும் மிடில் ஸ்டம்பை அடுத்தடுத்த பந்துகளில் இரண்டுமுறை உடைத்து தெறிக்கவிட்டுள்ளார்.
அர்ஸ்தீப் சிங்கின் பந்துவீச்சில் மிடில் ஸ்டம்ப் இருமுறை உடைந்துபோன வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.