'இந்திய கிரிக்கெட் அணியின் முதுகெலும்பு விராட் கோலி'- ஷாகின் அப்ரிடி
இந்தியாவுக்கு எதிராக நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ரோகித் மற்றும் கோலியை ஷாகின் அப்ரிடி அவுட் ஆக்கினார்.;
பல்லாகெலெ,
ஆசிய கோப்பை தொடரில் மிகவும் எதிர்பார்த்த இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 48.5 ஓவரகளில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 266 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி 66 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது 5-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த இஷான் கிஷன், பாண்ட்யா இணை அணியை சரிவில் இருந்து மீட்டனர்.
இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். இதில் இஷான் கிஷன் 82 ரன்களிலும், பாண்ட்யா 87 ரன்களிலும் அவுட் ஆகினர். இவர்களது பொறுப்பான ஆட்டத்தால் இந்தியா 266 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து பாகிஸ்தான் தனது இன்னிங்சை தொடங்குவதற்கு முன்னர் தொடர்ந்து மழை பெய்ததன் காரணமாக ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி பகிர்ந்து அளிக்கப்பட்டது.
இந்த ஆட்டத்தில் இந்தியாவின் மிக முக்கிய விக்கெட்டுகளான ரோகித் மற்றும் கோலியை ஷாகின் அப்ரிடி போல்ட் முறையில் அவுட்டாக்கினார்.
போட்டி முடிந்த பின் கோலியின் விக்கெட் குறித்து பேசிய ஷாகின் அப்ரிடி, ' அவரது விக்கெட் எங்கள் அணிக்கு மிகவும் முக்கியமானது. விராட் கோலி இந்திய அணிக்கு முதுகெலும்பாக இருக்கிறார். அவருக்கு சரியான லைனில் பந்து வீச வேண்டும் என்பது எங்கள் திட்டம். அது பலனளித்தது. போட்டியின் முடிவு எங்கள் கையில் இருந்தது. ஆனால் வானிலையை மீறி எங்களால் எதுவும் செய்ய முடியாது. எல்லாவற்றிற்கும் மேலாக எங்கள் செயல்திறன் நன்றாக இருந்தது ' என்று கூறினார்.
பாகிஸ்தான் அணி தனது முதல் போட்டியில் நேபாள அணிக்கு எதிராக வெற்றி பெற்றதன் மூலம் கிடைத்த 2 புள்ளிகள் மற்றும் இந்த போட்டியில் கிடைத்த 1 புள்ளி ஆகியவை மூலம் 'குரூப்4' சுற்றுக்கு முன்னேறியுள்ளது.