விராட் கோலி அதிரடி சதம்..!! குஜராத் அணிக்கு 198 ரன்கள் வெற்றி இலக்கு

பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணிக்கு 198 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-05-21 16:45 GMT

பெங்களூரு,

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலையில் பெங்களூரு ஆடி வருகிறது.

இந்த சூழலில் மழையின் காரணமாக பெங்களூரு-குஜாராத் அணிகளுக்கு இடையிலான போட்டிக்கான டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து டாஸ் வென்ற அணி குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து பெங்களூரு அணியின் சார்பில் முதலாவதாக கேப்டன் பாப் டூ பிளசிஸ் மற்றும் விராட் கோலி ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். அதிரடியாக துவக்கம் தந்த இந்த ஜோடியில் டூ பிளசிஸ் 28 (19) ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய மேக்ஸ்வெல் 11 ரன்களும், லாம்ரோர் 1 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

அடுத்ததாக விராட் கோலியுடன், ப்ரேஸ்வெல் ஜோடி சேர்ந்தார். அணியின் ரன் ரேட்டை சீராக உயர்த்திய இந்த ஜோடியில் ப்ரேஸ்வெல் 26 (16) ரன்களுக்கு வெளியேறினார். அடுத்து களமிறங்கிய தினேஷ் கார்த்திக் (0) ரன் ஏதும் எடுக்காமல் கேட்ச் ஆனார்.

மறுமுனையில் அதிரடியாக ரன் குவிப்பில் ஈடுபட்ட விராட் கோலி 60 பந்துகளில் தனது சதத்தினை பதிவு செய்து அசத்தினார்.

இறுதியில் விராட் கோலி 101 (61) ரன்களும், அனுஜ் ராவத் 23 (15) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்களில்5 விக்கெட்டுகளை இழந்து 197 ரன்கள் எடுத்தது. குஜராத் அணியின் சார்பில் அதிகபட்சமாக நூர் அகமது 2 விக்கெட்டுகளும், முகமது ஷமி, யாஷ் தயாள் மற்றும் ரஷித் கான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்கி ஆடி வருகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்