விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: தொடக்க ஆட்டத்தில் புதுச்சேரி வெற்றி
ராஞ்சியில் நடந்த ‘இ’ பிரிவு ஆட்டத்தில் புதுச்சேரி அணி 3 விக்கெட்டுக்கு 158 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
38 அணிகள் பங்கேற்றுள்ள விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று தொடங்கியது. இந்த போட்டி டெல்லி, கொல்கத்தா, பெங்களூரு, மும்பை, ராஞ்சி ஆகிய நகரங்களில் நடக்கிறது. டிசம்பர் 2-ந் தேதி வரை நடைபெறும் இந்த தொடரின் நாக்-அவுட் சுற்று ஆட்டங்கள் ஐதராபாத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கலந்து கொண்டுள்ள. 38 அணிகள் 5 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.
இதில் பெங்களூரு அருகே ஆலூரில் நடந்த 'சி' பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் தமிழ்நாடு-பீகார் அணிகள் மோதின. ஆட்டம் ஆரம்பிக்கும் முன்பே மழை பெய்ததால் போட்டி தொடங்குவதில் தாமதமானது. இதனால் போட்டி 38 ஓவர்கள் கொண்டதாக குறைக்கப்பட்டது. டாஸ் ஜெயித்த பீகார் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட் செய்த தமிழக அணி 17.1 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 106 ரன்கள் எடுத்து இருந்த போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டம் அத்துடன் ரத்து செய்யப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கு தலா 2 புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது. இதேபோல் ஆலூரில் நடந்த கேரளா-அரியானா அணிகள் இடையிலான ஆட்டமும் மழையால் பாதியில் கைவிடப்பட்டது.
ராஞ்சியில் நடந்த 'இ' பிரிவு ஆட்டம் ஒன்றில் புதுச்சேரி-மிசோரம் அணிகள் சந்தித்தன. முதலில் ஆடிய மிசோரம் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 156 ரன்களே எடுத்தது. பின்னர் ஆடிய புதுச்சேரி அணி 29.4 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 158 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேப்டன் ராமச்சந்திரன் ரகுபதி 47 ரன்னில் போல்டு ஆனார். அருண் கார்த்திக் 59 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். கொல்கத்தாவில் நடந்த ஆட்டத்தில் கர்நாடகா-மேகாலயா (பி பிரிவு) அணிகள் மோதின. முதலில் ஆடிய கர்நாடக அணி 50 ஓவர்களில் 259 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. இதனை அடுத்து ஆடிய மேகாலயா அணி 46 ஓவர்களில் 144 ரன்னில் சுருண்டது. இதனால் கர்நாடக அணி 115 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.