இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 5-வது டி-20 ஆட்டம் இன்று நடக்கிறது

இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்புடன் இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் களமிறங்குகின்றன.

Update: 2023-08-13 00:31 GMT

Image Courtacy: ICCTwitter

லாடெர்ஹில்,

இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 4-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள லாடெர்ஹில் நகரில் நேற்று இரவு நடந்தது. இந்திய அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. வெஸ்ட்இண்டீஸ் அணியில் ஜான்சன் சார்லஸ், ரோஸ்டன் சேஸ், அல்ஜாரி ஜோசப் நீக்கப்பட்டு ஜாசன் ஹோல்டர், ஒடியன் சுமித், ஷாய் ஹோப் சேர்க்கப்பட்டனர்.

'டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்த வெஸ்ட்இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கைல் மேயர்ஸ், பிரன்டன் கிங் ஆகியோர் களம் இறங்கினர். முதல் ஓவரில் அக்ஷர் பட்டேல் பந்து வீச்சில் சிக்சர், பவுண்டரி விளாசிய கைல் மேயர்ஸ் (17 ரன்) அடுத்த ஓவரில் அர்ஷ்தீப் சிங் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சனிடம் சிக்கினார். பிரன்டன் சிங் (18 ரன்) விக்கெட்டையும் அர்ஷ்தீப் சிங் கைப்பற்றினார்.

ஹெட்மயர் அரைசதம்

இதைத்தொடர்ந்து களம் இறங்கிய நிகோலஸ் பூரன் (1 ரன்), கேப்டன் ரோமன் பவெல் (1 ரன்) ஆகியோர் ஒரே ஓவரில் குல்தீப் யாதவ் சுழலில் கேட்ச் கொடுத்து வெளியேறினர். இதனால் வெஸ்ட்இண்டீஸ் அணி 57 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை (6.5 ஓவரில்) இழந்து தடுமாறியது.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஹெட்மயர், ஷாய் ஹோப்புடன் கைகோர்த்தார். இருவரும் நேர்த்தியாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். ஷாய் ஹோப் 45 ரன்னில் (29 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) யுஸ்வேந்திர சாஹல் பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த ரொமாரியா ஷெப்பர்டு (9 ரன்), ஜாசன் ஹோல்டர் (3 ரன்) நிலைக்கவில்லை. 5-வது அரைசத்தை எட்டிய ஹெட்மயர் ( 61 ரன்கள், 39 பந்து, 3 பவுண்டரி, 4 சிக்சர்) கடைசி ஓவரில் அர்ஷ்தீப் சிங் பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.

இந்தியா அபார வெற்றி

20 ஓவர்களில் வெஸ்ட்இண்டீஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் குவித்தது. ஒடியன் சுமித் 15 ரன்னுடனும், அகீல் ஹூசைன் 5 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும், அக்ஷர் பட்டேல், யுஸ்வேந்திர சாஹல், முகேஷ் குமார் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

பின்னர் 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர்களாக களம் கண்ட ஜெய்ஸ்வால், சுப்மன் கில் நிலைத்து நின்று அபாரமாக ஆடி அணியை வெற்றியை நோக்கி அழைத்து சென்றனர். ஸ்கோர் 165 ரன்னாக உயர்ந்த போது சுப்மன் கில் 77 ரன்னில் (47 பந்து, 3 பவுண்டரி, 5 சிக்சர்) ரொமாரியா ஷெப்பர்டு பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். 17 ஓவர்களில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜெய்ஸ்வால் 84 ரன்னுடனும் (51 பந்து, 11 பவுண்டரி, 3 சிக்சர்), திலக் வர்மா 7 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இன்று கடைசி 20 ஓவர் போட்டி

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தொடரில் 2-2 என்ற கணக்கில் சமநிலையை எட்டியது. இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி இதே மைதானத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை டி.டி.ஸ்போர்ட்ஸ் மற்றும் பொதிகை சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

Tags:    

மேலும் செய்திகள்