டி.என்.பி.எல். கிரிக்கெட்: சேலம் அணியை எளிதில் வீழ்த்தி திருப்பூர் வெற்றி

20 ஓவர்கள் முடிவில் சேலம் அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்தது.

Update: 2024-07-21 17:34 GMT

image courtesy: TNPL twitter

நெல்லை,

டி.என்.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற 2-வது லீக் ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ் - சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற திருப்பூர் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய சாத்விக் - துஷார் ரஹேஜா இணை சிறப்பாக விளையாடி வலுவான அடித்தளம் அமைத்து கொடுத்தனர்.

இருவரும் அரைசதம் அடித்த நிலையில் சாத்விக் 50 ரன்களிலும், துஷார் 79 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அவர்களுக்கு பின் களமிறங்கிய வீரர்களில் ஒரு பேட்ஸ்மேன் கூட 20 ரன்களை தாண்டவில்லை. இதனால் 200 ரன்களை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட அந்த அணி 192 ரன்களில் கட்டுப்படுத்தப்பட்டது.

20 ஓவர்கள் முடிவில் திருப்பூர் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 192 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக துஷார் ரஹேஜா 79 ரன்களும், சாத்விக் 50 ரன்களும் அடித்தனர். சேலம் தரப்பில் அதிகபட்சமாக பொய்யாமொழி மற்றும் குரு சாயி தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதனையடுத்து 193 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சேலம் அணி பேட்டிங் செய்தது.

அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய அபிஷேக் 1 ரன்னிலும் முகமது அத்னான் கான் ரன் எதுவும் எடுக்காமலும் அவுட்டாகி அதிர்ச்சியளித்தனர். அடுத்து வந்த விஷால் வைத்யா சிறப்பாக விளையாடி 35 ரன்கள் எடுத்து அவுட்டானார். பின்னர் வந்த ரவி ராஜன், ஹரிஷ் குமார் சிறப்பாக விளையாடினர். ஹரிஷ் குமார் 32 ரன்களில் ஆட்டமிழந்தார். ரவி ராஜன் அரைசதம் கடந்தார்.

இருப்பினும், 20 ஓவர்கள் முடிவில் சேலம் அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 141 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த நிலையில் 51 ரன்கள் வித்தியாசத்தில் சேலம் அணியை வீழ்த்தி திருப்பூர் தமிழன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்