டி.என்.பி.எல். கிரிக்கெட்: திண்டுக்கல் அணிக்கு 2-வது வெற்றி

நத்தத்தில் நடந்த 8-வது லீக்கில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி, முன்னாள் சாம்பியன் மதுரை பாந்தர்சுடன் மோதியது.

Update: 2023-06-18 22:11 GMT

திண்டுக்கல்,

டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றிரவு நத்தத்தில் நடந்த 8-வது லீக்கில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி, முன்னாள் சாம்பியன் மதுரை பாந்தர்சுடன் மோதியது. 'டாஸ்' ஜெயித்த திண்டுக்கல் கேப்டன் ஆர்.அஸ்வின், மதுரையை பேட்டிங் செய்ய பணித்தார்.

இதன்படி முதலில் பேட்டிங் செய்த மதுரை அணி ஒரு விக்கெட்டுக்கு 62 ரன்களுடன் நல்ல நிலையில் இருந்தது. இந்த சூழலில் கேப்டன் ஹரி நிஷாந்த் (24 ரன்) மதிவாணனின் சுழற்பந்து வீச்சில் ஸ்டம்பிங் செய்யப்பட்டார். அதிரடியில் மிரட்டிய ஜே.கவுசிக் (45 ரன், 34 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்) வருண்சக்ரவர்த்தியின் சுழலில் சிக்கினார். அத்துடன் உத்வேகத்தை இழந்த மதுரை அணியால் நிமிர முடியவில்லை. 19.3 ஓவர்களில் 123 ரன்னில் சுருண்டது. திண்டுக்கல் தரப்பில் சரவணகுமார், சுபோத் பாட்டி தலா 3 விக்கெட்டும், வருண் சக்ரவர்த்தி 2 விக்கெட்டும் அறுவடை செய்தனர்.

பின்னர் எளிய இலக்கை நோக்கி ஆடிய திண்டுக்கல் அணி தொடக்கத்தில் தடுமாறியது. 32 ரன்னை எட்டுவதற்குள் அவர்களின் 3 விக்கெட்டுகளை இடக்கை வேகப்பந்து வீச்சாளர் குர்ஜப்நீத் சிங் காலி செய்து நெருக்கடி கொடுத்தார். 4-வது விக்கெட்டுக்கு விக்கெட் கீப்பர் பாபா இந்திரஜித்தும், மாற்று ஆட்டக்காரர் ஆதித்யா கணேசும் இணைந்து சிக்கலில் இருந்து அணியை காப்பாற்றியதுடன் வெற்றிக்கும் வித்திட்டனர். இந்திரஜித்தின் தடாலடியான சிக்சர்கள் ரசிகர்களை பரவசப்படுத்தின.

திண்டுக்கல் அணி 14.1 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 124 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் மெகா வெற்றியை ருசித்தது. இந்திரஜித் 78 ரன்களுடனும் (48 பந்து, 7 பவுண்டரி, 4 சிக்சர்), ஆதித்யா கணேஷ் 22 ரன்னுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர். திண்டுக்கல் அணிக்கு இது 2-வது வெற்றியாகும். மதுரைக்கு 2-வது தோல்வியாகும்.   

Tags:    

மேலும் செய்திகள்