டிஎன்பிஎல்: 60 ரன்கள் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி அபார வெற்றி..!
19.3 ஓவர்கள் முடிவில் திருப்பூர் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 73 ரன்களில் சுருண்டது.
சேலம்,
8 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் நெல்லையில் தொடங்கியது. நெல்லை, திண்டுக்கல், கோவை ஆகிய இடங்களில் நடந்து முடிந்துள்ளன. தற்போது கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் சேலத்தில் நடந்து வருகிறது.
இதில் இன்று இரவு நடைபெற்ற 25-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற திருப்பூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து சேப்பாக் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.
தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஜெகதீசன் ரன் ஏதும் எடுக்காமலும், கேப்டன் கவுசிக் காந்தி 2 ரன்களிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த ராதாகிருஷ்ணன் -சாய் கிஷோர் ஜோடி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருப்பினும் இந்த ஜோடி வெகு நேரம் நீடிக்கவில்லை. ராதாகிருஷ்னன் (24) , சாய் கிஷோர் (19) ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். பின்னர் வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர்.
இருப்பினும் பின்வரிசையில் சிறப்பாக விளையாடிய சசிதேவ் 45 ரன்கள் அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் சேப்பாக் அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருப்பூர் அணி களமிறங்கியது.
திருப்பூர் அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய அரவிந்த் 10 ரன்களிலும் ஶ்ரீகாந்த் அனிருத்தா 25 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து களமிறங்கிய திருப்பூர் அணி வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இந்த நிலையில் 19.3 ஓவர்கள் முடிவில் திருப்பூர் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 73 ரன்களில் சுருண்டது.
இதையடுத்து சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் திருப்பூர் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. சேப்பாக் அணி சார்பில் சாய் கிஷோர் 4 ஓவர்கள் வீசி 2 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சந்தீப் வாரியர் 3 விக்கெட்டுகளையும் ராமதாஸ் அலெக்சாண்டர் 2 விக்கெட்டுகளையும் சோனு யாதவ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.