கிரிக்கெட்டில் இதெல்லாம் சாதாரணமாக நடக்கக்கூடிய ஒன்றுதான் - வெற்றிக்கு பின் ரோகித் சர்மா பேட்டி..!
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் ரோகித் சர்மா ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.;
மொகாலி,
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 158 ரன்கள் அடித்தது. பின்னர் 159 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 17.3 ஓவர்களிலேயே இலக்கை கடந்து வெற்றி பெற்றது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஷிவம் துபே 5 பவுண்டரி மற்றும் 2 சிக்சர்கள் என ஆட்டமிழக்காமல் 60 ரன்கள் குவித்து அசத்தினார்.
முன்னதாக இந்திய அணியின் பேட்டிங்போது தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ரோகித் சர்மா, மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் உடன் ஏற்பட்ட தவறான புரிதலால் ரன் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.
இந்நிலையில் இந்த போட்டி முடிந்து வெற்றி குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில் : ''உண்மையிலேயே இங்கு குளிர் அதிகமாக இருக்கிறது. ஆனால் தற்போது பரவாயில்லை என்று நினைக்கிறேன். இந்த போட்டியின் ஆரம்பத்தில் பந்து எனது விரலில் படும்போது சற்று வலியை உணர்ந்தேன். ஆனால் தற்போது அனைத்தும் நலமாக இருக்கிறது.
இந்த போட்டியில் இருந்து நிறைய பாசிட்டிவான விஷயங்களை நாங்கள் கற்றுக் கொண்டுள்ளோம். குறிப்பாக பந்துவீச்சில் நமது அணியின் செயல்பாடு சிறப்பாக இருக்கிறது. சுழற்பந்து வீச்சாளர்களும், வேகப்பந்து வீச்சாளர்களும் சிறப்பாக செயல்படுகின்றனர். இந்த போட்டியில் நான் ரன் அவுட்டானது எதிர்பாராத விதமாக நடந்தது. கிரிக்கெட்டில் இதெல்லாம் சாதாரணமாக நடக்கக்கூடிய ஒன்றுதான்.
நான் ஆட்டமிழந்து வெளியேறியதும் சுப்மன் கில் போட்டியை கொண்டு செல்ல வேண்டும் என்று நினைத்தேன். அதன் பிறகு ஷிவம் துபே, ஜிதேஷ் சர்மா ஆகியோர் மிகச்சிறப்பாக விளையாடினர். இறுதியில் ரிங்கு சிங் தனது சிறப்பான பார்மை வெளிக்காட்டினார். இந்த போட்டியில் அனைத்து விதத்திலும் நாங்கள் சிறப்பாக செயல்பட்டதாக நினைக்கிறேன்'' என்றார்.