துலீப் கோப்பை தொடரில் அவர்கள் இல்லாதது ஆச்சரியமளிக்கிறது - பாக்.முன்னாள் வீரர்

ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வெல்ல புஜாரா முக்கிய பங்காற்றியதாக பாசித் அலி கூறியுள்ளார்.

Update: 2024-08-19 00:12 GMT

image courtesy: AFP

கராச்சி,

இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டெஸ்ட் தொடரான துலீப் கோப்பை கிரிக்கெட் (4 நாள் ஆட்டம்) தொடர் செப்டம்பர் -5ம் தேதி தொடங்க உள்ளது. இந்த போட்டிக்கான அணி பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. 'ஏ' அணிக்கு சுப்மன் கில், 'பி' அணிக்கு அபிமன்யு ஈஸ்வரன், 'சி' அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட், 'டி' அணிக்கு ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் கேப்டன்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதில் ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ், லோகேஷ் ராகுல், ஜெய்ஸ்வால், இஷான் கிஷன், சாய் சுதர்சன், ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் விளையாடுகிறார்கள். கேப்டன் ரோகித் சர்மா, கோலி, ஜஸ்பிரித் பும்ரா, அஸ்வின் ஆகியோருக்கு இந்த போட்டியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் அந்த அணிகளில் சீனியர் வீரர்களான புஜாரா மற்றும் ரஹானே ஆகியோர் கழற்றி விடப்பட்டுள்ளனர். கடந்த 10 வருடங்களாக டெஸ்ட் அணியில் முக்கிய வீரர்களாக செயல்பட்ட அவர்கள் சமீபத்திய வருடங்களில் பெரிய ரன்கள் குவிக்கவில்லை. அதனால் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அவர்களை கழற்றி விட்ட தேர்வுக்குழு சர்பராஸ் கான் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்தது.

இந்நிலையில் ஆஸ்திரேலிய மண்ணில் 2018/19, 2020/21 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் இந்தியா டெஸ்ட் தொடரை வெல்ல புஜாரா முக்கிய பங்காற்றியதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் பாசித் அலி கூறியுள்ளார். ஆனாலும் அவர்களை இத்தொடரில் தேர்ந்தெடுக்காதது ஆச்சரியமளிப்பதாக அவர் கூறியுள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "துலீப் கோப்பை அணிகளை நானும் பார்த்தேன். அங்கே 3 - 4 வீரர்கள் இல்லாதது ஆச்சரியமளிக்கிறது. குறிப்பாக ரஹானே, புஜாரா இல்லை. சஞ்சு சாம்சன், ரிங்கு சிங்கும் இல்லை. ஷிவம் துபே ஆல் ரவுண்டராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். துலீப் கோப்பையில் யார் அசத்தப்போகிறார் என்பதை பார்ப்போம்.

புஜாரா ஆஸ்திரேலியாவில் மிகவும் பயனுள்ளவராக இருப்பார். கவுதம் கம்பீர் பயிற்சியாளராக இருந்தும் அவர் தேர்ந்தெடுக்கப்படாதது எனக்கு ஆச்சரியமளிக்கிறது. அதே போல ரிங்கு சிங் இல்லாததும் ஆச்சரியம். இந்த தேர்வுகளில் கவுதம் கம்பீர் முக்கிய பங்காற்றியுள்ளார்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்