ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்களுக்கு பயிற்சி முகாம் தொடங்கியது

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 30-ந்தேதி முதல் செப்டம்பர் 17-ந்தேதி வரை இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடக்கிறது.

Update: 2023-08-24 21:36 GMT

பெங்களூரு,

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 30-ந்தேதி முதல் செப்டம்பர் 17-ந்தேதி வரை இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் ரோகித் சர்மா தலைமையிலான 18 பேர் கொண்ட இந்திய அணி சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.

ஆசிய கோப்பை போட்டிக்கு சிறந்த முறையில் தயாராகுவதற்காக இந்திய வீரர்களுக்கு 6 நாள் பயிற்சி முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயிற்சி முகாம் பெங்களூரு அருகே உள்ள ஆலூரில் நேற்று தொடங்கியது. கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, காயத்தில் இருந்து மீண்டுள்ள ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல், ஹர்திக் பாண்ட்யா உள்ளிட்டோர் முகாமில் பங்கேற்றுள்ளனர். அயர்லாந்து தொடரில் ஆடிய ஜஸ்பிரித் பும்ரா, பிரசித் கிருஷ்ணா, திலக் வர்மா, மாற்று வீரர் சஞ்சு சாம்சன் ஆகியோர் இன்று பயிற்சி முகாமில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முகாமில் பேட்டிங், பந்து வீச்சு பயிற்சி மட்டுமின்றி உடல்தகுதி விஷயத்திலும் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக யோ-யோ சோதனையும் நடத்தப்படுகிறது. யோ-யோ சோதனை என்பது குறிப்பிட்ட தூரத்தை குறிப்பிட்ட நேரத்திற்குள் வேகமாக ஓடி கடக்க வேண்டும். இதில் 16.5 புள்ளியை கடந்தால் தான் வீரர்கள் முழு உடல்தகுதியுடன் இருப்பதற்குரிய அளவுகோலாக இந்திய கிரிக்கெட் வாரியம் வைத்துள்ளது. முதல் நாளில் கோலி யோ-யோ சோதனையில் 17.2 புள்ளிகள் எடுத்து அசத்தினார். இதை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிழ்ச்சியோடு பகிர்ந்துள்ளார்.

ரோகித், பாண்டயா, ஆகியோரும் இந்த கடுமையான சோதனையை வெற்றிகரமாக முடித்தனர். மறுபடியும் லேசான காயமடைந்துள்ள லோகேஷ் ராகுல் மற்ற பயிற்சியில் ஈடுபட்டாரே தவிர, யோ-யோ சோதனைக்கு தன்னை உட்படுத்திக் கொள்ளவில்லை. அவரது உடல்தகுதி எந்த அளவுக்கு மேம்படுகிறது என்பதை அணி நிர்வாகம் உன்னிப்பாக கவனிக்கிறது.

இந்த பயிற்சி முகாம் வருகிற 29-ந்தேதி நிறைவடைகிறது. மறுநாள் அங்கிருந்து வீரர்கள் கொழும்பு புறப்பட்டு செல்கிறார்கள். ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை செப்.2-ந்தேதி சந்திக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்