"இந்திய பவுலர்கள் அபாரமாக பந்து வீசி நெருக்கடி கொடுத்தனர்" - ஜிம்பாப்வே கேப்டன் சகப்வா
தவானும், சுப்மான் கில்லும் அருமையாக விளையாடி இந்திய அணியின் வெற்றியை வசப்படுத்தி விட்டதாக ஜிம்பாப்வே கேப்டன் சகப்வா தெரிவித்துள்ளார்.
ஹராரே,
ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது. இதன் முதலாவது ஆட்டம் ஹராரேயில் நேற்று நடந்தது. 'டாஸ்' ஜெயித்த இந்திய கேப்டன் லோகேஷ் ராகுல் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.
இதன்படி முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி இந்திய வேகப்பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறியது. 40.3 ஓவர்களில் ஜிம்பாப்வே அணி 189 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. பின்னர் 190 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 30.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 192 ரன்கள் சேர்த்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
தோல்விக்கு பிறகு ஜிம்பாப்வே கேப்டன் சகப்வா கூறுகையில், "இந்திய பவுலர்கள் உண்மையிலேயே அபாரமாக பந்து வீசி நெருக்கடி கொடுத்தனர். முதல் 4-5 ஓவர்களுக்கு பிறகு ஆட்டம் எங்களது கையை விட்டு போய் விட்டது. ஒன்று, இரண்டு பெரிய பார்ட்னர்ஷிப் தேவைப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை.
இதே போல பந்து வீச்சில் எங்களது பவுலர்கள் முடிந்த வரை கடுமையாக முயற்சித்தனர். ஆனால் தவானும், சுப்மான் கில்லும் அருமையாக விளையாடி வெற்றியை வசப்படுத்தி விட்டனர். அடுத்த ஆட்டத்தில் வலுவாக மீண்டு வருவது குறித்து ஆலோசிப்போம்" என்றார்.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டி கொண்ட தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. 2-வது ஒரு நாள் போட்டி இதே மைதானத்தில் நாளை (சனிக்கிழமை) பிற்பகல் 12.45 மணிக்கு நடைபெற உள்ளது.