இம்பேக்ட் பிளேயர் விதிமுறை இந்த போட்டியில் எங்களுக்கு மிகப்பெரிய அளவில் உதவி செய்தது - ஸ்ரேயாஸ் ஐயர்

இந்த போட்டிக்கு முன்னதாக நாங்கள் ஸ்டார்க்கிடம் இந்த போட்டி எவ்வளவு முக்கியமானது என்று பேசியிருந்தோம் என ஸ்ரேயாஸ் கூறினார்.

Update: 2024-05-04 07:31 GMT

Image Courtesy: AFP

மும்பை,

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய கொல்கத்தா அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 169 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

கொல்கத்தா தரப்பில் அதிகபட்சமாக வெங்கடேஷ் ஐயர் 70 ரன்கள் எடுத்தார். மும்பை தரப்பில் நுவான் துஷாரா மற்றும் பும்ரா தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதையடுத்து 170 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி ஆடியது.

ஆனால் மும்பை அணி வீரர்கள் கொல்கத்தாவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இறுதியில் மும்பை அணி 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 145 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் கொல்கத்தா அணி 24 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மும்பை தரப்பில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 56 ரன்கள் எடுத்தார். கொல்கத்தா தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்த ஆட்டத்தில் அபாரமாக பேட்டிங் ஆடிய வெங்கடேஷ் ஐயருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

இந்நிலையில் இந்த போட்டியில் வெற்றி பெற்ற பின் கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் அளித்த பேட்டியில் கூறியதாவது, இந்த போட்டிக்கு முன்னதாக நாங்கள் ஸ்டார்க்கிடம் இந்த போட்டி எவ்வளவு முக்கியமானது என்று பேசியிருந்தோம். ஒருவேளை இந்த போட்டியில் தோல்வி அடைந்தால் கடைசி நான்கு போட்டிகளில் இரண்டு வெற்றிகளை பெற்றாக வேண்டிய சூழல் இருந்திருக்கும்.

ஆனால் இந்த போட்டியில் எங்களது அணியின் வீரர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு வெற்றியை தேடி தந்துள்ளனர். இந்த வெற்றி மிகவும் அற்புதமான ஒன்று. இம்பேக்ட் பிளேயர் விதிமுறை இருந்தது இந்த போட்டியில் எங்களுக்கு மிகப்பெரிய அளவில் உதவி செய்தது. மணிஷ் பாண்டே முதல் நாளிலிருந்து வாய்ப்புக்காக காத்திருந்தார்.

அந்த வகையில் இன்று தான் அவருக்கு முதல் வாய்ப்பு கிடைத்தது. அதிலேயே மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி எங்களுக்கு நல்லதொரு ஸ்கோரை எட்ட பெரிய உதவி செய்திருந்தார். அவரது ஆட்டம் இந்த போட்டியில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.

அதோடு எங்களிடம் இருக்கும் பந்துவீச்சாளர்களை வைத்து இந்த இலக்கிறகுள் அவர்களை சுருட்ட முடியும் என்று நான் வீரர்களிடம் நம்பிக்கையாக கூறினேன். அந்த வகையில் இந்த வெற்றியை பெற்றதில் மகிழ்ச்சி. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்