நியூசிலாந்து-இலங்கை மோதும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் நாளை தொடக்கம்

நியூசிலாந்து-இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் நாளை தொடங்குகிறது.

Update: 2023-03-07 22:27 GMT

கிறைஸ்ட்சர்ச்,

இலங்கை கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது. இதன்படி நியூசிலாந்து-இலங்கை அணிகள் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் நாளை (வியாழக்கிழமை) இந்திய நேரப்படி அதிகாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்குட்பட்ட இந்த தொடர் கருணாரத்னே தலைமையிலான இலங்கை அணிக்கு மிகவும் முக்கியமானதாகும். டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 53.33 சதவீத புள்ளியுடன் 3-வது இடத்தில் இருக்கும் இலங்கை அணி நியூசிலாந்துக்கு எதிரான தொடரை 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றினால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பில் நீடிக்க முடியும்.

அதே நேரத்தில், இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று விட்ட ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஆமதாபாத்தில் நாளை தொடங்கும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டிரா கண்டாலோ அல்லது தோல்வி அடைந்தாலோ மட்டுமே இலங்கை அணிக்கு இறுதிப்போட்டியில் நுழைவதற்கான வாய்ப்பு உருவாகும். மாறாக ஆஸ்திரேலியாவை இந்தியா வீழ்த்தினால் 2-வது அணியாக இறுதிப்போட்டிக்குள் நுழையும்.

நடப்பு உலக டெஸ்ட் சாம்பியனான நியூசிலாந்து அணி ஏற்கனவே இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்து விட்டது. டிம் சவுதி தலைமையிலான நியூசிலாந்து அணி இதுவரை 11 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி, 6 தோல்வி, 3 டிரா என்று 27.27 சதவீத புள்ளியுடன் 8-வது இடத்தில் இருக்கிறது.

கடந்த மாதம் இறுதியில் வெலிங்டனில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் 'பாலோ-ஆன்' ஆகி சரிவில் இருந்து அபாரமாக மீண்டு வந்து ஒரு ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்று வரலாறு படைத்த நியூசிலாந்து அணி, எந்தவித மாற்றமும் இன்றி அதே உத்வேகத்துடன் இந்த போட்டி தொடரில் களம் காணுகிறது. வெலிங்டன் டெஸ்டில் 2-வது இன்னிங்சில் 132 ரன்கள் குவித்து அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்த கேன் வில்லியம்சனின் பாட்டி இறந்ததால் அவர் இந்த போட்டியில் ஆடுவாரா? என்ற சந்தேகம் நிலவியது. ஆனால் இன்று நடைபெறும் தனது பாட்டியின் இறுதி பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து கொள்ளும் அவர் உடனடியாக போட்டிக்கு திரும்புவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நியூசிலாந்து அணிக்கு வலுசேர்க்கும்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிசுற்றை எட்டுவது என்பது இலங்கை அணிக்கு கடும் சவால் நிறைந்ததாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில் சொந்த மண்ணில் நியூசிலாந்து அணியை வீழ்த்துவது என்பது கடினமானதாகும். நியூசிலாந்து மண்ணில் இதுவரை 19 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கும் இலங்கை அணி அதில் 2-ல் மட்டுமே (1995, 2006-ம் ஆண்டு) வெற்றி பெற்று இருக்கிறது. அங்கு 9 டெஸ்ட் தொடரில் ஆடி ஒன்றை மட்டும் (1995-ம் ஆண்டு 1-0) வென்று இருக்கிறது. ஒட்டுமொத்தத்தில் இவ்விரு அணிகளும் இதுவரை டெஸ்ட் போட்டியில் 36 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 16-ல் நியூசிலாந்தும், 9-ல் இலங்கையும் வெற்றி பெற்று இருக்கின்றன. 11 ஆட்டங்கள் டிராவில் முடிந்தன.

சொந்த மண்ணில் தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்ட நியூசிலாந்து அணியும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியை எட்ட இலங்கை அணியும் எல்லா வகையிலும் வரிந்து கட்டும் என்பதால் இந்த போட்டியில் பரபரப்புக்கு குறைவு இருக்காது.

போட்டி குறித்து நியூசிலாந்து அணியின் கேப்டன் டிம் சவுதி கூறுகையில், 'உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பில் இலங்கை அணி இன்னும் இருக்கிறது. கடந்த 2 ஆண்டுகளில் அவர்கள் சிறப்பாக செயல்பட்டதால் இந்த நிலையில் உள்ளனர். இலங்கை ஒரு சிறந்த அணி என்பது எங்களுக்கு தெரியும். அவர்கள் டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் உச்சத்தின் அருகில் உள்ளனர். ஆனால் நாங்கள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷப் இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்து விட்டோம்' என்றார்.

இலங்கை அணியின் கேப்டன் கருணாரத்னே கருத்து தெரிவிக்கையில், 'உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற நாங்கள் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய ஆட்டங்கள் இதுவாகும். நான் வீரர்கள் மீது அழுத்தம் கொடுக்க விரும்பவில்லை. ஆனால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வாய்ப்பில் நீடிக்க நாங்கள் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய ஆட்டம் இது என்பது எல்லோருக்கும் தெரியும். நாங்கள் தற்போது டாப்-3 இடங்களுக்குள் இருக்கிறோம். இறுதிப்போட்டிக்குள் நுழைய எங்களுக்கு இன்னும் ஒரு தடை மட்டுமே உள்ளது.

நாங்கள் இப்போது எந்த நிலையில் இருக்கிறோம் என்பது அனைவருக்கும் தெரியும். இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று உலக சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற வீரர்கள் கடுமையாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள். நாங்கள் எங்களுக்குரிய பாணியில் விளையாடி வருகிறோம். நியூசிலாந்தில் ஆடிய அனுபவம் எங்களுக்கு நிறைய இருக்கிறது. நாங்கள் இங்கு சில தொடரில் விளையாடி இருப்பதால் சூழ்நிலை குறித்து நன்கு தெரியும். இது இரு புதிய தொடர். எனவே நாங்கள் மீண்டும் புதிதாக தொடங்க வேண்டும். பந்துகளை நிறைய தவற விட வேண்டிய நிலை இருக்கும். இருப்பினும் நேர்மறையான எண்ணத்துடன் ஆடி ரன்களை சேர்க்க வேண்டும்' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்