இந்தியா-வங்காளதேசம் மோதும் முதலாவது டெஸ்ட் இன்று தொடக்கம்

இந்தியா-வங்காளதேசம் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சட்டோகிராமில் இன்று தொடங்குகிறது.

Update: 2022-12-13 23:40 GMT

சட்டோகிராம்,

டெஸ்ட் கிரிக்கெட்

வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஒரு நாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. அடுத்ததாக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது.

இதன்படி இந்தியா- வங்காளதேசம் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சட்டோகிராமில் உள்ள ஜாஹூர் அகமது ஸ்டேடியத்தில் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது.

ஒரு நாள் தொடரில் முதல் இரு ஆட்டங்களில் சொதப்பினாலும் கடைசி ஆட்டத்தில் இஷான் கிஷனின் இரட்டை சதமும், விராட் கோலியின் சதமும் இந்தியாவுக்கு 227 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை தேடித்தந்தது. அதே உத்வேகத்துடன் டெஸ்ட் தொடரை நமது வீரர்கள் எதிர்கொள்கிறார்கள்.

கேப்டன் ரோகித் சர்மா கைவிரலில் ஏற்பட்ட காயத்தால் விலகியதால் லோகேஷ் ராகுல் அணியை வழிநடத்துகிறார். தொடக்க ஆட்டக்காரராக சுப்மான் கில்லுடன், ராகுல் ஆடுவார் என்று தெரிகிறது. வங்காளதேச ஏ அணிக்கு எதிரான போட்டியில் இரண்டு சதங்கள் அடித்த புதுமுகம் அபிமன்யு ஈஸ்வரன் பெயரும் பரிசீலனையில் உள்ளது. மிடில் வரிசையில் விராட் கோலி, துணை கேப்டன் புஜாரா, ஸ்ரேயாஸ் அய்யர் வலுசேர்க்கிறார்கள். டெஸ்டில் 3 ஆண்டுகளாக சதம் அடிக்காத விராட் கோலி அந்த ஏக்கத்தை தணிப்பாரா? என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர். பந்துவீச்சில் பும்ரா, முகமது ஷமி, ரவீந்திர ஜடேஜா ஆகிய முன்னணி பவுலர்கள் இல்லாத நிலையில் சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின், அக்‌ஷர் பட்டேலைத் தான் அணி மலைபோல் நம்பி உள்ளது. 5-வது பவுலர் இடத்திற்கு சுழற்பந்து வீச்சாளர்கள் குல்தீப் யாதவ், சவுரப் குமார், ஆல்-ரவுண்டர் ஷர்துல் தாக்குர், ஜெய்தேவ் உனட்கட் ஆகியோரில் ஒருவருக்கு இடம் கிடைக்கும்.

டெஸ்ட் சாம்பியன்ஷிப்

இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது என்ற வகையில் இந்த தொடர் இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானதாகும். டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்தியா 52.08 சதவீத புள்ளிகளுடன் 4-வதுஇடத்தில் இருக்கிறது. இந்தியாவுக்கு இன்னும் 6 டெஸ்ட் போட்டிகள் (வங்காளதேசத்துடன் 2 டெஸ்ட் மற்றும் ஆஸ்திரேலியாவுடன் 4 டெஸ்ட்) மீதம் உள்ளன. இவற்றில் குறைந்தது 5-ல் வெற்றி பெற்றால் தான் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற முடியும். இதற்கு முதலில் வங்காளதேச தொடரை முழுமையாக கைப்பற்ற வேண்டியது அவசியமாகும்.

இந்திய பந்துவீச்சு பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே கூறுகையில், ' நாங்கள் நீண்ட இடைவெளிக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுகிறோம். வெள்ளை நிற பந்து போட்டியில் இருந்து சிவப்பு நிற பந்து போட்டிக்கு ஏற்ப மனதளவில் சீக்கிரம் மாற வேண்டியது முக்கியம். ரிஷப் பண்ட் இயல்பாகவே அதிரடியாக விளையாடக்கூடியவர். அந்த அணுகுமுறையை மாற்றும்படி அணி நிர்வாகம் ஒரு போதும் அறிவுறுத்தியதில்லை. தனது பங்களிப்பு மற்றும் அணி நிர்வாகம் தன்னிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறது என்பது அவருக்கு தெரியும்' என்று குறிப்பிட்டார்.

ஷகிப் அல்-ஹசன் காயத்தால் அவதி

ஒரு நாள் தொடரை வென்ற உற்சாகத்துடன் உள்ள வங்காளதேச அணியினர் டெஸ்ட் போட்டியிலும் கடும் நெருக்கடி கொடுப்பார்கள். உள்ளூர் சூழல் அவர்களுக்கு அனுகூலமானது. இந்தியாவுக்கு எதிராக இதுவரை 11 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள வங்காளதேசம் 9-ல் தோல்வியும், 2-ல் டிராவும் கண்டுள்ளன. எனவே முதல்முறையாக இந்தியாவை வீழ்த்தி வரலாறு படைப்பதில் தீவிரம் காட்டுவார்கள்.

ஒரு நாள் தொடரில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் கலக்கிய மெஹிதி ஹசன் மிராஸ், கேப்டன் ஷகிப் அல்-ஹசன், லிட்டான்தாஸ், மொமினுல் ஹக், எபாதத் ஹூசைன் உள்ளிட்டோர் நம்பிக்கை அளிக்கிறார்கள். தமிம் இக்பால் காயத்தால் ஒதுங்கியதால் மக்முதுல் ஹசன் ஜாயுடன் இளம் வீரர் ஜாகிர் ஹசன் தொடக்க வீரராக இறங்குவதற்கு வாய்ப்புள்ளது.

2-வது ஒரு நாள் போட்டியின் போது இந்திய வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் வீசிய பவுன்சர் பந்து, வங்காளதேச கேப்டன் ஷகிப் அல்-ஹசனின் விலாபகுதியில் தாக்கியது. கொஞ்சம் வலி இருந்ததால் நேற்று அடிபட்ட இடத்தில் எக்ஸ்ரே எடுத்து பார்க்கப்பட்டது. நேற்று முன்தினம் பயிற்சியில் ஈடுபட்ட அவருக்கு முன்னெச்சரிக்கையாக நேற்று ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது. மற்றபடி அவர் களம் இறங்குவதில் எந்த சிக்கலும் இருக்காது என்று வங்காளதேச கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

மைதானம் எப்படி?

இந்த ஆடுகளம் பேட்டிங்குக்கு சொர்க்கபுரியாகும். சுழற்பந்து வீச்சும் ஓரளவு எடுபடும். இங்கு இதுவரை 22 டெஸ்டுகளில் விளையாடியுள்ள வங்காளதேசம் 2-ல் வெற்றியும், 13-ல் தோல்வியும், 7-ல் டிராவும் சந்தித்துள்ளது. இந்திய அணி 2 டெஸ்டில் ஆடி ஒன்றில் வெற்றி, ஒன்றில் டிராவும் கண்டுள்ளது.

இரு அணிகளையும் ஒப்பிடும் போது இந்தியாவின் கையே சற்று ஓங்குகிறது. கொஞ்சம் எச்சரிக்கையுடன் விளையாடினால் போதும். தொடரை வெற்றிகரமாக தொடங்கலாம்.

காலை 9 மணிக்கு...

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: லோகேஷ் ராகுல் (கேப்டன்), சுப்மான் கில் அல்லது அபிமன்யு ஈஸ்வரன், புஜாரா, விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பண்ட், அஸ்வின், அக்‌ஷர் பட்டேல், குல்தீப் யாதவ், உமேஷ் யாதவ், முகமது சிராஜ்.

வங்காளதேசம்: மக்முதுல் ஹசன் ஜாய், ஜாகிர் ஹசன், நஜ்முல் ஹூசைன் ஷன்டோ, முஷ்பிகுர் ரஹிம், ஷகிப் அல்-ஹசன் (கேப்டன்), லிட்டான் தாஸ், நுருல் ஹசன், மெஹிதி ஹசன் மிராஸ், ஷோரிபுல் இஸ்லாம், கலித் அகமது, எபாதத் ஹூசைன்.

காலை 9 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை சோனி ஸ்போர்ட்ஸ் 3, 4, 5 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

 

Tags:    

மேலும் செய்திகள்