இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணியில் 4 சுழற்பந்து வீச்சாளர்கள்..!

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடுவதற்காக ஆஸ்திரேலிய அணி 4 சுழற்பந்து வீச்சாளர்களுடன் இந்தியா வருகிறது.

Update: 2023-01-11 21:26 GMT



சிட்னி,

அடுத்த மாதம் தொடக்கத்தில் இந்தியாவுக்கு வருகை தர உள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் பிப்ரவரி 9-ந்தேதி நாக்பூரில் தொடங்குகிறது. எஞ்சிய டெஸ்ட் போட்டிகள் டெல்லி (பிப்.17-21), தர்மசாலா (மார்ச்.1-5), ஆமதாபாத் (மார்ச்.9-13) ஆகிய இடங்களில் நடக்கிறது.

இந்த டெஸ்ட் தொடரை இந்தியா 3-0 அல்லது 3-1 என்ற கணக்கில் வென்றால் மட்டுமே உலக டெஸ்ட சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற முடியும் என்பதால் முக்கியத்துவம் பெறுகிறது. அதே சமயம் ஆஸ்திரேலியாவுக்கு ஒன்றில் டிரா செய்தாலே போதும்.

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடும் 18 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இந்திய ஆடுகளங்கள் சுழற்பந்து வீச்சுக்கு உகந்தவை என்பதால் அதை கருத்தில் கொண்டு ஆஸ்திரேலிய தேர்வு குழு, நாதன் லயன், ஆஷ்டன் அகர், மிட்செல் ஸ்வெப்சன் ஆகிய சுழற்பந்து வீச்சாளருடன் புதுமுகமாக டாட் மர்பியை தேர்வு செய்துள்ளது. உள்நாட்டில் விக்டோரியா மாகாண அணிக்காக விளையாடும் 22 வயதான சுழற்பந்து வீச்சாளர் டாட் மர்பி 7 முதல்தர ஆட்டங்களில் 29 விக்கெட் வீழ்த்தி கவனத்தை ஈர்த்துள்ளார்.

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்டின் போது விரலில் காயமடைந்த வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் ஆடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் 2-வது டெஸ்டுக்கு முன்பாக அணியுடன் இணைகிறார்.

இதே போல் பந்து தாக்கி விரலில் காயமடைந்த ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீன் காயத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளாவிட்டாலும் அணியில் இடத்தை தக்க வைத்துள்ளார். அணியில் மாற்று விக்கெட் கீப்பர் தேர்வு செய்யப்படவில்லை. ஒரு வேளை பிரதான விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி காயத்தில் சிக்கினால், பகுதிநேர விக்கெட் கீப்பராக பீட்டர் ஹேன்ட்ஸ் கோம்ப் செயல்படுவார். மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசும் திறன்பட படைத்த 24 வயதான லான்ஸ் மோரிஸ் அணியில் நீடிக்கிறார். தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் வெளியே உட்கார வைக்கப்பட்ட அவர், இந்திய தொடரில் அறிமுக வீரராக களம் காண வாய்ப்புள்ளது.

ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி வருமாறு:-

டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஸ்சேன், ஸ்டீவன் சுமித், டிராவிஸ் ஹெட், மேட் ரென்ஷா, பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், ஆஷ்டன் அகர், நாதன் லயன், மிட்செல் ஸ்வெப்சன், டாட் மர்பி, பேட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், ஹேசில்வுட், ஸ்காட் போலன்ட், லான்ஸ் மோரிஸ்.

Tags:    

மேலும் செய்திகள்