டி20 உலகக்கோப்பை: இந்திய அணியில் அவர் தேர்வு செய்யப்பட்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை - வாசிம் ஜாபர்

ஜூன் 1ம் தேதி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் டி20 உலகக்கோப்பை தொடர் தொடங்க உள்ளது.

Update: 2024-04-13 09:07 GMT

மும்பை,

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் சீசன் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடர் நிறைவடைந்ததும் ஜூன் 1ம் தேதி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் டி20 உலகக்கோப்பை தொடர் தொடங்குகிறது. இந்த தொடரில் மொத்தம் 20 அணிகள் கலந்து கொள்கின்றன.

டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடிக்க அனைத்து வீரர்களும் ஐ.பி.எல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளனர்.

இதில் 2019-ல் அறிமுகம் ஆன முதலே ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் ரியான் பராக் முந்தைய சீசன்களில் அவ்வளவு சிறப்பாக செயல்படவில்லை. ஆனால் நடப்பு சீசனில் அபாரமாக செயல்பட்டு வரும் அவர் 43, 84, 54, 4, 76 என 5 போட்டிகளில் 3 அரை சதங்கள் உட்பட 261 ரன்களை 87.00 என்ற நல்ல சராசரியில் குவித்துள்ளார். மேலும் நடப்பு தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளார்.

இந்நிலையில் தற்போதுள்ள பார்முக்கு டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் ரியான் பராக் தேர்வு செய்யப்பட்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை என முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் பாராட்டு தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு:-

"இந்த வருட ஐ.பி.எல். தொடரில் ரியான் பராக் வளர்ந்து வரும் வீரராக செயல்பட்டு வருகிறார். ஒரு இளம் வீரர் இப்படி செயல்படுவதை பார்ப்பது புத்துணர்ச்சியாக இருக்கிறது. உள்ளூர் தொடரில் அசாம் அணிக்காக இந்த வருடம் சிறப்பாக செயல்பட்ட அவர் அதே பார்மை ஐ.பி.எல். தொடரிலும் வெளிப்படுத்தி வருகிறார். 4-வது இடம் அவருக்கு நன்றாக பொருந்துகிறது. அவருடைய கடின உழைப்பு தற்போது தெரிகிறது. மிகவும் பிட்டாக இருக்கும் அவர் அமைதியாக செயல்படுகிறார்.

கடந்த சில வருடங்களாக நிறைய கிண்டல்களை சந்தித்த அவருடைய ஷாட் செலக்சன் நன்றாக இருக்கிறது. இதற்கு முன் பினிஷர் எனும் கடினமான வேலையை செய்த அவர் மீது ராஜஸ்தான் நிர்வாகம் தொடர்ந்து நம்பிக்கை வைத்தது. இப்போது 4-வது இடத்தில் அசத்தும் அவர் தன்னை திறமை குறைந்தவன் என்று நினைத்த எல்லோரையும் தவறு என்று நிரூபிப்பதில் அர்ப்பணிப்புடன் விளையாடுகிறார். தற்போதைய பார்மை பார்க்கும்போது அவரை டி20 உலகக்கோப்பைக்கு தேர்வாளர்கள் தேர்வு செய்தாலும் நான் ஆச்சரியப்பட மாட்டேன்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்