டி20 உலகக்கோப்பை: ஒருவேளை இதனால்தான் ரிங்கு சிங் தேர்வாகாமல் இருந்திருக்கலாம் - கங்குலி
டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ரிசர்வ் பட்டியலில் மட்டுமே ரிங்கு சிங் இடம்பெற்றுள்ளார்.
புதுடெல்லி,
டி20 உலகக்கோப்பை தொடருக்கான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. கேப்டனாக ரோகித் சர்மா நீடிக்கும் நிலையில், துணை கேப்டன் பொறுப்பு ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவிற்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த அணியில் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதேபோல விக்கெட் கீப்பர்களாக நல்ல பார்மில் உள்ள ரிஷப் பண்ட் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் தேர்வாகியுள்ளது ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
ஆனால் இந்த அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இளம் வீரர் ரிங்கு சிங் கழற்றி விடப்பட்டுள்ளது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்துள்ளது. ஏனெனில் கடந்த ஐ.பி.எல். தொடரில் குஜராத்துக்கு எதிராக 5 சிக்சர்கள் அடித்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்த அவர் இந்தியாவுக்காக அறிமுகமானார். அந்த வாய்ப்பில் பெரும்பாலான போட்டிகளில் அட்டகாசமாக செயல்பட்ட அவர் 2023 ஆசிய விளையாட்டு போட்டிகள், தென் ஆப்பிரிக்க தொடர், 2024 ஆப்கானிஸ்தான் டி20 தொடர்களில் சிறந்த பினிஷராக செயல்பட்டு இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றினார்.
இருப்பினும் தற்போதைய ஐ.பி.எல். தொடரில் பெரிய ரன்கள் எடுக்கத் தவறினார் என்ற ஒரே காரணத்திற்காக ரிங்குவை கழற்றி விட்டுள்ள தேர்வு குழு ரிசர்வ் பட்டியலில் மட்டுமே இணைத்துள்ளது.
இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் மைதானங்கள் சுழலுக்கு அதிக சாதகமாக இருக்கும் என்று சவுரவ் கங்குலி கூறியுள்ளார். அதனாலேயே எக்ஸ்ட்ரா ஸ்பின்னரை தேர்ந்தெடுப்பதற்காக ரிங்குவை தேர்வுக் குழுவினர் கழற்றி விட்டிருக்கலாம் என்றும் கங்குலி தெரிவித்துள்ளார்.
இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு:- " இந்திய அணி மிகவும் சிறப்பாக இருக்கிறது. அதில் தேர்வு செய்யப்பட்டுள்ள அனைவருமே மேட்ச் வின்னர்கள். அந்த 15 பேரும் தேர்வு செய்யப்படுவதற்கு போதுமான தகுதியுடையவர்கள். டிராவிட் மற்றும் ரோகித் ஆகியோர் சிறந்தவர்களை தேர்ந்தெடுத்திருப்பார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
அது வெஸ்ட் இண்டீஸ். அங்குள்ள பிட்சுகள் கொஞ்சம் ஸ்லோவாக சுழலுக்கு சாதகமாக இருக்கும். எனவே தேர்வுக் குழுவினர் மற்றொரு ஸ்பின்னரை விரும்புகின்றனர். ஒருவேளை அதனாலேயே ரிங்கு சிங் வாய்ப்பு பெறாமல் இருந்திருக்கலாம். ஆனால் இது ரிங்குவின் ஆரம்பம் மட்டுமே. வருங்காலங்களில் ரிங்குவுக்கு அதிக வாய்ப்பு கிடைக்கும்" என்று கூறினார்.