டி20 உலகக்கோப்பை 2022: கனவு அணியை அறிவித்த ஐசிசி - 2 இந்திய வீரர்களுக்கு ஆடும் லெவனில் இடம் ...!

டி20 உலகக்கோப்பை 2022க்கான கனவு அணியை ஐசிசி அறிவித்துள்ளது.

Update: 2022-11-14 10:48 GMT

Image Courtesy: AFP 

மெல்போர்ன்,

ஆஸ்திரேலியாவில் கடந்த மாதம் தொடங்கிய 8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நேற்று நிறைவடைந்தது. மெல்போர்னில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் முன்னாள் சாம்பியன்களான இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி இங்கிலாந்தின் அபாரமான பந்துவீச்சில் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. இங்கிலாந்து அணி சார்பில் பந்துவீச்சில் அசத்திய சாம் கரன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து 138 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி பென் ஸ்டோக்ஸ் அதிரடியால் 19 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்து வெற்றி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 2-வது முறையாக உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

உலகக் கோப்பையை வென்ற ஜாஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. கிரிக்கெட் ரசிகர்கள், முன்னாள் வீரர்கள் உட்பட பலரும் இங்கிலாந்து அணிக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், டி20 உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்களை வைத்து மதிப்புமிக்க அணியை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது. அந்த மதிப்புமிக்க அணியில் இந்தியாவில் இருந்து இரண்டு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், 4 இங்கிலாந்து வீரர்களும், பாகிஸ்தான் அணியில் இருந்து 2 வீரர்களும், நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே அணியில் இருந்து தலா 1 வீரர்களும், 12 வது வீரராக இந்திய அணி வீரரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஐசிசி அறிவித்துள்ள கனவு அணிக்கு சாம்பியன் பட்டம் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் கேப்டன் மற்றும் தொடக்க ஆட்டக்காரராக இடம் பெற்றுள்ளார்.

அவருடன் மற்றொரு தொடக்க ஆட்டக்காரராக பட்லரின் தொடக்க ஜோடி ஆட்டக்காரர் அலெக்ஸ் ஹேலஸ் இடம் பிடித்துள்ளார். 3வது மற்றும் 4வது இடத்துக்கு தொடரில் அதிக ரன்கள் அடித்த விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

5வது இடத்துக்கு நியூசிலாந்து அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிளென் பிலிப்ஸ் மற்றும் 6வது இடத்துக்கு ஜிம்பாப்வே ஆல் ரவுண்டர் சிக்கந்தர் ராசாவும், 7 மற்றும் 8 இடங்களில் முறையே பாகிஸ்தான் ஆல் ரவுண்டர் ஷதாப் கானும், உலகக்கோப்பையின் தொடர் நாயகன் சாம் கரனும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 9, 10, 11 இடங்களுக்கு ஆன்ரிச் நோர்ட்சே, மார்க் வுட், ஷாகின் அப்ரிடி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

அணியில் 12வது வீரராக இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்த்திக் பாண்ட்யா இடம் பெற்றுள்ளார்.

ஐசிசி அறிவித்துள்ள டி20 உலகக்கோப்பை 2022 கனவு அணி:-

1. ஜோஸ் பட்லர் ( கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்) - 212 ரன்கள் மற்றும் 9 அவுட்டுகள்

2. அலெக்ஸ் ஹேலஸ் - 225 ரன்கள்

3. விராட் கோலி - 296 ரன்கள்

4. சூர்யகுமார் யாதவ் - 239 ரன்கள்

5. கிளென் பிலிப்ஸ் - 201ரன்கள்

6. சிக்கந்தர் ராசா - 219 ரன்கள் மற்றும் 10 விக்கெட்டுகள்

7. ஷதாப் கான் - 98 ரன்கள் மற்றும் 11 விக்கெட்டுகள்

8. சாம் கரன் - 13 விக்கெட்டுகள்

9. ஆன்ரிச் நோர்ட்சே -11 விக்கெட்டுகள்

10. மார்க் வுட் - 9 விக்கெட்டுகள்

11. ஷாகின் அப்ரிடி - 11 விக்கெட்டுகள்

12வது வீரர்: ஹர்த்திக் பாண்ட்யா -128 ரன்கள் 8 விக்கெட்டுகள்

Tags:    

மேலும் செய்திகள்