சிக்சர் மழை பொழிந்த சூர்யகுமார்... விராட் கோலி அரைசதம்- இந்திய அணி 192 ரன்கள் குவிப்பு
சூர்யகுமார் யாதவ் 22 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார்.
துபாய்,
15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் துபாயில் இன்று (புதன்கிழமை) நடக்கும் 4-வது லீக் ஆட்டத்தில் இந்தியா- ஹாங்காங் (ஏ பிரிவு) அணிகள் மோதி வருகின்றன.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹாங்காங் அணியின் கேப்டன் நிஜாகத் கான் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தொடங்கியது. தொடக்க வீரர்களாக கேஎல் ராகுல் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா களமிறங்கினர்.
பவர்பிளேவில் இந்த ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ரோகித் சர்மா 13 பந்துகளில் 21 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆயுஷ் ஷுக்லா பந்துவீச்சில் ஐசஸ் கானிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து விராட் கோலி - கே எல் ராகுல் ஜோடி சேர்ந்தனர்.
ஹாங்காங் அணி பந்துவீச்சாளர்கள் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தியதால் இந்திய ஜோடியால் தொடக்கத்தில் அதிரடி ரன் குவிப்பில் ஈடுபட முடியவில்லை. கே.எல் ராகுல் 39 பந்துகளில் 36 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.
பின்னர் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் விராட் கோலியுடன் இணைந்து அதிரடி ரன்குவிப்பில் ஈடுபட்டார். இதனால் இறுதி கட்டத்தில் இந்திய அணியின் ரன் கணக்கு உயர்ந்தது. விராட் கோலி 40 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். அவரை தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் 22 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார்.
இறுதி ஓவரில் சூர்யகுமார் யாதவ் 4 சிக்சர்கள் அடித்து சிக்சர் மழை பொழிந்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் குவித்தது. கோலி 59 ரன்கள் (44 பந்துகள்) சூர்யகுமார் யாதவ் 68 ரன்கள் (26 பந்துகள்) எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதையடுத்து 193 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் ஹாங்காங் அணி களமிறங்குகிறது.