ஒரே ஆண்டில் ஆயிரம் ரன் குவித்து சூர்யகுமார் சாதனை - ரோகித் சர்மா புகழாரம்

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் ஜிம்பாப்வேயை வீழ்த்திய இந்திய அணி அரைஇறுதியில் இங்கிலாந்துடன் 10-ந்தேதி மோதுகிறது.

Update: 2022-11-06 21:57 GMT

image courtesy: BCCI twitter

மெல்போர்ன்,

8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்று ஒரே நாளில் குரூப்2-ல் மூன்று முக்கியமான ஆட்டங்கள் நடந்தன. ஆஸ்திரேலிய நேரப்படி இரவில் மெல்போர்னில் அரங்கேறிய கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி, ஜிம்பாப்வேயை சந்தித்தது. இந்திய அணியில் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்கு பதிலாக ரிஷப் பண்ட் சேர்க்கப்பட்டார்.

நெதர்லாந்திடம் தென்ஆப்பிரிக்கா பணிந்ததால் இந்த ஆட்டத்திற்கு முன்பாகவே இந்தியஅணியின் அரைஇறுதி வாய்ப்பு உறுதியாகி விட்டது. அதே உற்சாகத்துடன் 'டாஸ்' ஜெயித்த இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

இதன்படி ரோகித் சர்மாவும், லோகேஷ் ராகுலும் இந்தியாவின் இன்னிங்சை தொடங்கினர். ரோகித் சர்மா (15 ரன்), முஜரபானி வீசிய 'ஷாட்பிட்ச்' பந்தில் சிக்சர் அடிக்க ஆசைப்பட்டு கேட்ச் ஆனார். அடுத்து வந்த விராட் கோலி, ராகுலுடன் இணைந்தார். துரிதமான ரன் சேகரிப்பில் கவனம் செலுத்திய ராகுல் அரைசதம் விளாசினார். இதற்கிடையே கோலி 26 ரன்னில் (25 பந்து, 2 பவுண்டரி) ஆட்டமிழந்தார். ராகுல் தனது பங்குக்கு 51 ரன்கள் (35 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்த நிலையில் சிகந்தர் ராசாவின் சுழலில் சிக்கினார். ரிஷப் பண்ட் (3 ரன்) தாக்குப்பிடிக்கவில்லை.

உலகின் 'நம்பர் ஒன்' பேட்ஸ்மேனான சூர்யகுமார் யாதவ் களம் புகுந்த பிறகு தான் ஆட்டம் உண்மையிலேயே சூடுபிடித்தது. சரவெடியான பேட்டிங்கால் குழுமியிருந்த 82 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்களை குஷிப்படுத்திய அவர் கராவா, சதரா ஓவர்களில் சிக்சர்களை பறக்க விட்டு பிரமிக்க வைத்தார். அவருக்கு ஹர்திக் பாண்ட்யா (18 ரன், 18 பந்து) ஒத்துழைப்பு கொடுத்தார். இன்னிங்சை சிக்சருடன் அட்டகாசமாக முடித்து வைத்த சூர்யகுமாரின் வாணவேடிக்கையால் கடைசி 5 ஓவர்களில் மட்டும் இந்தியா 79 ரன்கள் திரட்டியது.

20 ஓவர் முடிவில் இந்தியா 5 விக்கெட்டுக்கு 186 ரன்கள் குவித்தது. சூர்யகுமார் யாதவ் 61 ரன்களுடன் (25 பந்து, 6 பவுண்டரி, 4 சிக்சர்) களத்தில் இருந்தார். நடப்பு தொடரில் அவரது 3-வது அரைசதம் இதுவாகும்.

பின்னர் மெகா இலக்கை நோக்கி விளையாடிய ஜிம்பாப்வேக்கு ரன் கணக்கை தொடங்கும் முன்பே விக்கெட் சரிந்தது. வெஸ்லி மாதேவிர் (0) புவனேஷ்வர்குமாரின் பந்து வீச்சில் கேட்ச் ஆனார். அடுத்து வந்த சகப்வாவும் டக்-அவுட் ஆக, இந்த வீழ்ச்சியில் இருந்து ஜிம்பாப்வேயால் துளி கூட நிமிர முடியவில்லை. அதன் பிறகு ஜிம்பாப்வே அணியினர் ஏதோ கடமைக்கு விளையாடியது போன்று ஓவர்களை கடத்தினர்.

17.2 ஓவர்களில் ஜிம்பாப்வே 115 ரன்னில் சுருண்டது. இதன் மூலம் இந்தியா 71 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய தரப்பில் அஸ்வின் 3 விக்கெட்டும், ஹர்திக் பாண்ட்யா, முகமது ஷமி தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர். அரைசதம் நொறுக்கிய சூர்யகுமார் யாதவ் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

5-வது ஆட்டத்தில் ஆடிய இந்தியா 4 வெற்றி, ஒரு தோல்வி என்று தனது பிரிவில் புள்ளி பட்டியலில் 8 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து கம்பீரமாக அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்துள்ளது. 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இந்திய அணி அரைஇறுதியை எட்டுவது இது 4-வது முறையாகும். இந்திய அணி அரைஇறுதியில் வருகிற 10-ந்தேதி இங்கிலாந்துடன் அடிலெய்டில் பலப்பரீட்சை நடத்துகிறது.

இந்திய வீரர் சூர்யகுமார் இந்த ஆட்டத்தில் 37 ரன்கள் எடுத்த போது நடப்பு ஆண்டில் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார். அவர் இந்த ஆண்டில் இதுவரை 28 ஆட்டங்களில் ஆடி ஒரு சதம், 9 அரைசதம் உள்பட 1026 ரன்கள் குவித்து முதலிடத்தில் உள்ளார். பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் 924 ரன்களுடன் (23 ஆட்டம்) 2-வது இடத்தில் இருக்கிறார். மேலும் 20 ஓவர் போட்டியில் ஒரே ஆண்டில் ஆயிரம் ரன்களை கடந்த 2-வது வீரர் என்ற பெருமையையும் பெற்றார். இதற்கு முன்பு 2021-ம் ஆண்டில் முகமது ரிஸ்வான் 1326 ரன்கள் எடுத்திருந்தார்.

வெற்றிக்கு பிறகு இந்திய கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், 'இது ஒரு முழுமையான ஆல்ரவுண்ட் செயல்பாடு. இதைத்தான் நாங்கள் எதிர்பார்த்தோம். ஏற்கனவே அரைஇறுதிக்கு தகுதி பெற்று விட்ட நிலையில், இந்த ஆட்டத்தில் களம் இறங்கி விரும்பிய மாதிரி விளையாட வேண்டும் என்று நினைத்தோம். அதை செய்து இருக்கிறோம். சூர்யகுமார் யாதவின் பேட்டிங் அற்புதம். அவர் இந்த மாதிரி அதிரடியாக விளையாடுவதை வெளியில் இருந்து பார்க்கும்போது வீரர்கள் அமர்ந்திருக்கும் பகுதியில் நெருக்கடி தணிந்து விடுகிறது. அத்துடன் எதிர்முனையில் நிற்கும் பேட்ஸ்மேனின் அழுத்தத்தையும் அவர் குறைந்து விடுகிறார்.

அரைஇறுதியில் இங்கிலாந்தை அடிலெய்டில் சந்திக்க உள்ளோம். அங்குள்ள சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப எங்களை சீக்கிரம் மாற்றிக்கொள்வது முக்கியமாகும். ஏற்கனவே அங்கு நாங்கள் விளையாடி இருக்கிறோம். ஆனாலும் அதற்கு ஏற்ப மாற்றிக் கொள்வது அவசியமாகும். இங்கிலாந்து நல்ல அணி. இது சிறந்த போட்டியாக இருக்கும்' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்