ஸ்டப்ஸ் போராட்டம் வீண்.. டெல்லியை வீழ்த்தி நடப்பு ஐ.பி.எல். தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்த மும்பை
டெல்லி தரப்பில் அதிகபட்சமாக ஸ்டப்ஸ் 71 ரன்கள் அடித்தார்.;
மும்பை,
ஐ.பி.எல். தொடரில் இன்று 2 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இதில் நடைபெறும் முதலாவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் - டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் விளையாடின.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய மும்பை அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா - இஷான் கிஷன் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடினர். இதனால் ரன்ரேட் மளமளவென எகிறியது.
இவர்களில் அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரோகித் சர்மா 1 ரன்னில் அதை தவறவிட்டார். ரோகித் 49 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் நீண்ட நாள் காயத்திற்கு பின் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் சந்தித்த 2-வது பந்திலேயே டக் அவுட் ஆனார். சிறிது நேரத்திலேயே இஷான் கிஷன் 42 ரன்களிலும், திலக் வர்மா 6 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
பின்னர் கை கோர்த்த பாண்ட்யா - டிம் டேவிட் இணை பொறுப்புடன் விளையாடி அணியை முன்னெடுத்து சென்றது. ஒருபுறம் டிம் டேவிட் அதிரடியாக விளையாட மறுமுனையில் பாண்ட்யா நிதானத்தை கடைபிடித்தார். இதில் பாண்ட்யா 39 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார்.
கடைசி 2 ஓவர்களில் டிம் டேவிட் - ஷெப்பார்டு அதிரடியாக விளையாடி அணிக்கு வலு சேர்த்தனர். அதிலும் குறிப்பாக ஷெப்பார்டு கடைசி ஓவரில் 4 சிக்சர்கள் உட்பட 32 ரன்கள் குவித்தார்.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 234 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ரோகித் சர்மா 49 ரன்கள் அடித்தார். டெல்லி தரப்பில் அக்சர் படேல் மற்றும் நார்ட்ஜே தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதனையடுத்து 235 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி டெல்லி களமிறங்கிய டெல்லி அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான வார்னர் 10 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர் ஜோடி சேர்ந்த பிரித்வி ஷா - அபிஷேக் போரல் ஆகியோர் சிறப்பாக பார்ட்னர்ஷிப் அமைத்தனர். சிறப்பாக விளையாடிய இந்த இணையை பும்ரா பிரித்தார். அவரது பந்து வீச்சில் பிரித்வி ஷா 66 ரன்களில் போல்டானார். ஷா ஆட்டமிழந்த சிறிது நேரத்திலேயே அபிஷேக் போரலும் ஆட்டமிழந்தார்.
பின்னர் களமிறங்கிய பண்ட் இந்த முறை 1 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் ஸ்டப்ஸ் தனி ஆளாக போராடினார். மும்பை அணியின் பந்துவீச்சை பவுண்டரிக்கும் சிக்சருக்கும் பறக்கவிட்ட அவர் 25 பந்துகளில் 71 ரன்கள் குவித்தார். இருப்பினும் இலக்கை நெருங்க முடியவில்லை. அவரது போராட்டம் வீன் ஆனது.
முடிவில் டெல்லி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் மட்டுமே அடித்தது. இதன் மூலம் 29 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ் அணி நடப்பு ஐ.பி.எல். தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
டெல்லி தரப்பில் அதிகபட்சமாக ஸ்டப்ஸ் 71 ரன்கள் அடித்தார். மும்பை தரப்பில் அதிகபட்சமாக ஜெரால்ட் கோட்சே 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.