டி20 உலகக் கோப்பையில் இருந்து ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் விலகல்
ஆப்கானிஸ்தான் அணி முதல் வெற்றிக்காக காத்திருக்கும் நிலையில் நட்சத்திர வீரர் உலகக் கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளார்.
சிட்னி,
8-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இந்த நிலையில் இந்த தொடரில் இருந்து ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஹஸ்ரதுல்லா ஜசாய் விலகியுள்ளார்.
இந்த தொடரின் சூப்பர் 12 சுற்றில் குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள ஆப்கானிஸ்தான் அணி 3 போட்டிகளில் விளையாடியுள்ளது. அந்த அணியின் 2 போட்டிகள் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதை தவிர்த்து இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி தோல்வி அடைந்தது.
இதனால் அந்த அணி 2 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. அந்த அணி முதல் வெற்றிக்காக காத்திருக்கும் நிலையில் ஹஸ்ரதுல்லாஹ் ஜசாய் சிறுநீரக பிரச்சனை காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக குல்புதின் நைப் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். குல்புதின் நைப் ஏற்கனவே காத்திருப்பு வீரர்கள் பட்டியலில் இருந்ததால் தற்போது ஆஸ்திரேலியாவில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.