வங்காளதேச டெஸ்ட் அணிக்கு ஷகிப் அல்-ஹசன் மீண்டும் கேப்டன்

வங்காளதேச டெஸ்ட் அணிக்கு ஷகிப் அல்-ஹசன் மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Update: 2022-06-02 22:01 GMT

டாக்கா,

வங்காளதேச டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் மொமினுல் ஹக் தொடர்ச்சியான தோல்வி மற்றும் மோசமான பேட்டிங் எதிரொலியாக சில தினங்களுக்கு முன்பு கேப்டன்ஷிப்பில் இருந்து விலகினார். இந்த நிலையில் வங்காளதேச அணியின் டெஸ்ட் கேப்டனாக ஆல்-ரவுண்டர் ஷகிப் அல்-ஹசன் நேற்று மீண்டும் நியமிக்கப்பட்டார். துணை கேப்டனாக லிட்டான் தாஸ் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

35 வயதான ஷகிப் அல்-ஹசன் டெஸ்ட் கேப்டன் பதவிக்கு வருவது இது 3-வது முறையாகும். முதலில் 2009-ம் ஆண்டில் இருந்து 2011-ம் ஆண்டு வரை கேப்டனாக இருந்தார். ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்ட் தொடரை பறிகொடுத்ததால் அப்போது நீக்கப்பட்டார். அதன் பிறகு 2017-ம் ஆண்டு 2-வது முறையாக டெஸ்ட் கேப்டன் பதவியை ஏற்ற அவர், சூதாட்ட தரகர் அணுகியதை உடனடியாக ஐ.சி.சி.க்கு தெரிவிக்க தவறிய சர்ச்சையில் ஓராண்டு தடை விதிக்கப்பட்டதால் அத்துடன் பதவியையும் இழக்க நேரிட்டது. அவரது தலைமையில் வங்காளதேச அணி இதுவரை 14 டெஸ்டுகளில் விளையாடி 3-ல் வெற்றியும், 11-ல் தோல்வியும் சந்தித்துள்ளது.

வங்காளதேச அணி வெஸ்ட் இண்டீசுக்கு சென்று 2 டெஸ்ட், 3 இருபது ஓவர் மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதையொட்டி வங்காளதேச அணி நாளை மறுதினம் வெஸ்ட் இண்டீசுக்கு புறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்