உலக கோப்பை வாய்ப்பை இழந்த வெஸ்ட் இண்டீஸ்: காரணம் என்ன ? வெளிப்படையாக பேசிய கேப்டன் ஷாய் ஹோப்
கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை தொடரில் விளையாடும் வாய்ப்பை இழந்தது.;
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகின்றன. இந்த போட்டியில் கலந்து கொண்ட 10 அணிகளில் இருந்து ஜிம்பாப்வே, ஸ்காட்லாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஓமன், இலங்கை ஆகிய 6 அணிகள் சூப்பர் 6 சுற்றுக்கு முன்னேறின. இதில் இருந்து இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறும் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கு 2 அணிகள் தேர்வாகும். இந்நிலையில், சூப்பர் 6 தொடரின் நேற்றைய ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ்- ஸ்காட்லாந்து அணிகள் விளையாடின.
இந்த ஆட்டத்திற்கான டாசை ஸ்காட்லாந்து வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால், வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் செய்தது. இதில், வெஸ்ட் இண்டீஸ் 43.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 181 ரன் எடுத்தது. தொடர்ந்து, 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஸ்காட்லாந்து 43.3 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 185 ரன்கள் எடுத்தது. இதன்மூலம், ஸ்காட்லாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உலகக்கோப்பை தொடரில் விளையாடுவதற்கான வாய்ப்பை பெற்றது. முன்னாள் சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் அணி தோல்வியை சந்தித்ததை தொடர்ந்து, கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை தொடரில் விளையாடும் வாய்ப்பை இழந்தது.
தோல்விக்கான காரணம் குறித்து மேற்கிந்தியத்தீவுகள் கேப்டன் ஷாய் ஹோப் கூறுகையில்
நேர்மையாகச் சொல்வதென்றால், யாரையும் குற்றம் கூற இயலாது. இந்தத் தொடர் முழுவதுமே எங்கள் ஆட்டம் மோசமாகத்தான் இருந்தது. பீல்டிங் விஷயத்தில் எங்கள் வீரர்கள் சிறப்பாக செயல்படவில்லை. தொடர்ந்து கேட்ச்களை தவறவிட்டோம். யாருமே 100 சதவீத உழைப்பை போடவில்லை.
டாஸ் மிகவும் முக்கியமானது. ஒவ்வொரு கேப்டனும் டாஸில் வென்றவுடன் முதலில் பந்துவீச்சைத் தேர்ந்தெடுப்பார்கள், ஆடுகளத்தில் இருக்கும் ஈரப்பதத்தைப் பயன்படுத்தி எதிரணியின் பந்துவீச்சுக்கு பதிலடி கொடுப்பதும் அவசியம். இப்போட்டியில் ஸ்காட்லாந்து அணியினர் அபாரமாக செயல்பட்டனர். என கூறினார்.