எல்லாம் கோலி பார்த்துக்குவார்.. அகர்கர் சொன்னதாக போலியான கருத்துக்கு ஆக்ரோஷமாக பதிலளித்த ஷதாப் கான்
பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்களை விராட் கோலி சமாளிப்பார் என்று பிசிசிஐ தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் கூறியதாக கூறி, ஷதாப் கானிடம் செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.;
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றியது. கடைசி போட்டியில் 59 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது. இந்த போட்டியில் பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் ஷதாப் கான் 10 ஓவர்கள் வீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 42 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார். அந்த தொடர் முழுவதும் அவர் சிறப்பாக விளையாடினார்.
கடைசி போட்டி முடிந்த பிறகு, ஷதாப் கான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்களை விராட் கோலி சமாளிப்பார் என்று பிசிசிஐ தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் கூறியதாக கூறி, ஷதாப் கானிடம் ஒரு செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த ஷதாப் கான், "வெறும் வார்த்தைகள் உண்மையாக இருக்காது. உண்மை நிலவரம் போட்டி நாளில் மட்டுமே தெரியும். இப்போது இந்தியாவில் இருந்து யாரோ அல்லது நானோ என்ன வேண்டுமானாலும் கூறலாம். ஆனால் அவை வெறும் வார்த்தைகள். யார் வேண்டுமானாலும் எதையும் சொல்லலாம். போட்டி நடக்கும்போது பார்க்கலாம்" என்றார்.
அகர்கர் செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசியது தொடர்பாக பல வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவின. அதில், "விராட் கோலி பாகிஸ்தான் பந்துவீச்சை சமாளிப்பார்" என்று அகர்கர் கூறும் ஒரு வீடியோ பதிவு வைரலானது. இருப்பினும், பல்வேறு ஊடக தகவலின்படி, பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சை இந்தியா எவ்வாறு சமாளிக்க திட்டமிட்டுள்ளது? என அகர்கரிடம் எந்த கேள்வியும் எழுப்பப்படவில்லை.
ஆனால் ஷதாப் கானிடம் கேள்வி கேட்ட நிருபர் இந்த குழப்பம் தெரியாமல் கேள்வி கேட்டுவிட்டார். ஷதாப் கானும் அதற்கு பதிலளித்து தர்மசங்கடத்திற்கு ஆளானார்.
இலங்கை பல்லெகெலே சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் செப்டம்பர் 2-ம் தேதி நடைபெறும் ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.