அதிரடியில் மிரட்டிய சஹா, கில்... குஜராத் அணி 227 ரன்கள் குவிப்பு.!

குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் மட்டும் இழந்து 227 ரன்கள் குவித்தது.

Update: 2023-05-07 11:52 GMT

ஆமதாபாத்,

16வது ஐபிஎல் சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது. மிக முக்கியமான கட்டத்தை எட்டியுள்ள ஐபிஎல் சீசனில் அடுத்த சுற்றுக்கு முன்னேற அனைத்து அணிகளும் தீவிரமாக விளையாடி வருகின்றன.

இந்நிலையில், இன்று ஐபிஎல் தொடரில் இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இதில் ஆமதாபாத்தில் நடைபெறும் முதலாவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி, குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்தது.

அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சஹாவும், கில்லும் களமிறங்கினர். அவர்கள் எதிரணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். இருவரின் ஆட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் லக்னோ கேப்டன் க்ருணால் பாண்ட்யா திணறினார்.

சகா 43 பந்துகளில் 10 பவுண்டரி, 4 சிக்சருடன் 81 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திவந்த கில், 51 பந்துகளில் 2 பவுண்டரி, 7 சிக்சருடன் 94 ரன்கள் குவித்து கடைசி வரை களத்தில் இருந்தார். 

கேப்டன் ஹர்திக் 25 ரன்களும், டேவிட் மில்லர் 21 ரன்களும் எடுத்தனர். குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் மட்டும் இழந்து 227 ரன்கள் குவித்தது.

இதனை தொடர்ந்து 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் லக்னோ அணி விளையாடி வருகிறது.  

Tags:    

மேலும் செய்திகள்