அடுத்த இரண்டு ஆண்டுகளில் ரியான் பராக் இந்தியாவுக்காக விளையாடுவார் - இந்திய முன்னாள் வீரர்

இந்திய உள்நாட்டு கிரிக்கெட்டை ஒருபோதும் இலகுவாக எடுத்துக் கொள்ளாதீர்கள், அது உங்கள் சொந்த நலனுக்காகத்தான்.

Update: 2024-03-29 05:12 GMT

Image Courtesy: AFP

ஜெய்ப்பூர்,

ஐ.பி.எல் தொடரில் ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக ரியான் பராக் 84 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய டெல்லி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 12 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய ராஜஸ்தான் வீரர் ரியான் பராக் ஆட்டநாயகன் விருது பெற்றார். கடந்த 5 வருடங்களில் 2 அரை சதங்கள் மட்டுமே அடித்து மோசமாக செயல்பட்டு வந்த அவர் கிண்டல்களுக்கு உள்ளானார்.

இருப்பினும் இந்த வருடம் பேட்டிங் வரிசையில் 4-வது இடத்தில் களமிறங்கும் வாய்ப்பை பெற்ற அவர் முதல் போட்டியில் 43 ரன்கள் அடித்தார். நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சிறப்பாக ஆடி 84 ரன்கள் எடுத்ததுடன் ஆட்டநாயகன் விருது வென்று தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

ரியான் பராக்கின் இந்த ஆட்டத்தை முன்னாள் மற்றும் தற்போதைய கிரிக்கெட் வீரர்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் ரியான் பராக்கின் ஆட்டத்தை பாராட்டியுள்ள இர்பான் பதான் அவர் அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவுக்காக விளையாடுவார் என கூறியுள்ளார். இது டொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது,

இந்திய உள்நாட்டு கிரிக்கெட்டை ஒருபோதும் இலகுவாக எடுத்துக் கொள்ளாதீர்கள், அது உங்கள் சொந்த நலனுக்காகத்தான். ரியான் பராக்கைப் பாருங்கள், உள்நாட்டு கிரிக்கெட்டில் டன் கணக்கில் ரன் குவித்ததன் காரணமாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவர் அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவுக்காக விளையாடுவார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்