ரோகித் சர்மா வெற்றிகளை பெற்றுக்கொடுக்கும் காலத்தை கடந்து விட்டார் - ஜெப்ரி பாய்காட்

ரோகித் சர்மா சொந்த மண்ணில் கடந்த 4 வருடங்களில் 2 டெஸ்ட் சதங்கள் மட்டுமே அடித்துள்ளார்.

Update: 2024-01-30 14:37 GMT

image courtesy; AFP

லண்டன்,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் முடிவடைந்தது. இந்த போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி பெற்றது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் பிப்ரவரி 2-ம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில் 37 வயதை கடந்து விட்ட இந்திய கேப்டன் ரோகித் சர்மா பெரிய ரன்களை அடித்து இந்திய அணிக்கு வெற்றிகளை பெற்றுக்கொடுக்கும் காலத்தை கடந்து விட்டதாக இங்கிலாந்து முன்னாள் வீரர் ஜெப்ரி பாய்காட் தெரிவித்துள்ளார். அத்துடன் விராட் கோலி, ஷமி, ஜடேஜா, ராகுல், ரிஷப் பண்ட் போன்ற முக்கிய வீரர்கள் இல்லாததால் பலத்தில் ஒன்றுமில்லாமல் தடுமாறும் இருக்கும் இந்தியாவை தோற்கடிக்க இங்கிலாந்துக்கு பொன்னான வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு;- "ஏறத்தாழ 37 வயதாகும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தன்னுடைய சிறந்த காலத்தை கடந்து விட்டார். அவர் அழகான சிறிய இன்னிங்ஸ்களை விளையாடுகிறார். ஆனால் அவர் சொந்த மண்ணில் கடந்த 4 வருடங்களில் 2 டெஸ்ட் சதங்கள் மட்டுமே அடித்துள்ளார். எனவே இந்தியாவை அதன் சொந்த மண்ணில் 12 வருடங்கள் கழித்து தோற்கடிப்பதற்கு இங்கிலாந்துக்கு பொன்னான வாய்ப்பு கிடைத்துள்ளது.

விராட் கோலி, ஜடேஜா ஆகியோர் இரண்டாவது போட்டியில் விளையாட மாட்டார்கள். அதனால் இந்தியா சொந்த மண்ணில் தோற்பதற்கான சூழல் உள்ளது. குறிப்பாக விராட் கோலி, ஜடேஜா, ஷமி, ரிஷப் பண்ட் போன்றவர்கள் இல்லாதது இங்கிலாந்தின் வெற்றிக்கான அறிகுறியை காண்பிக்கிறது. ஏற்கனவே முதல் போட்டியில் மகத்தான வெற்றி பெற்றதால் இங்கிலாந்து முழுமையான தன்னம்பிக்கையை கொண்டுள்ளது. எனவே இங்கிலாந்து இந்த அரிதான வாய்ப்பை பயன்படுத்தி இந்தியாவை தோற்கடிக்க வேண்டும்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்