ஆஸ்திரேலியாவில் கடைசியாக இதை செய்ய வேண்டும் - விராட் கோலிக்கு மிட்செல் ஜான்சன் கோரிக்கை

விராட் கோலிக்கு இது ஆஸ்திரேலியாவில் கடைசி தொடராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Update: 2024-11-18 10:59 GMT

image courtesy: AFP

பெர்த்,

ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது. இதனையொட்டி இரு அணி வீரர்களும் தற்போது தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த காலங்களில் ஆஸ்திரேலிய மண்ணில் சிறப்பாக செயல்பட்டு வந்த இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி சமீப காலமாக சொந்த மண்ணில் கூட சுமாரான செயல்பாடுகளையே வெளிப்படுத்தி வருகிறார். இதனால் இந்த தொடரில் இந்தியா வெற்றி பெற அவர் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியமாகிறது. மேலும் இது ஆஸ்திரேலியாவில் அவரது கடைசி தொடராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் கடைசி முறையாக விளையாடவிருக்கும் விராட் கோலி சதமடிக்க வேண்டும் என்று அந்நாட்டின் முன்னாள் வீரர் மிட்செல் ஜான்சன் தெரிவித்துள்ளார். முன்னதாக 2014 பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் விராட் கோலிக்கு அவர் எதிரியாக கருதப்பட்டார். ஏனெனில் அந்த தொடரில் அவர் பவுன்சராக வீசி விராட் கோலிக்கு கடும் சவால் விடுத்தார். அதிலும் ஒரு பவுன்சர் பந்து விராட் கோலியின் மண்டையை பதம் பார்த்தது. ஆனால் அதற்கு அசராத விராட் கோலி திருப்பி சதமடித்து காற்றில் முத்தத்தை பறக்க விட்டு பதிலடி கொடுத்தது ரசிகர்களால் மறக்க முடியாது.

அந்த சூழ்நிலையில் விராட் கோலி சதமடிக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவிக்கும் ஜான்சன் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு:- "36 வயதாகும் விராட் கோலி ஆஸ்திரேலியாவில் கடைசி முறையாக டெஸ்ட் தொடரில் விளையாடுகிறார். இது அவர் சிறப்பாக விளையாடிய இடமாகும். ஆஸ்திரேலியாவில் 54.08 என்ற அவருடைய பேட்டிங் சராசரி 47.83 என்ற கெரியர் சராசரியை விட அதிகம். சமீபத்தில் அவருடைய பார்ம் நன்றாக இல்லை.

அதனால் இந்திய ரசிகர்களுக்கு முன்னிலையில் மீண்டும் சிறப்பாக விளையாட வேண்டிய அழுத்தத்தில் அவர் உள்ளார். இந்த சூழ்நிலை சிறப்பாக செயல்படுவதற்கான உத்வேகத்தை அவருக்கு கொடுக்குமா அல்லது இதுவே அவரை சாய்க்குமா என்பதை பார்க்க நான் ஆவலாக உள்ளேன். ஒரு ரசிகனாக பார்க்கும்போது ஆஸ்திரேலியாவில் அவர் இன்னும் ஒரு டெஸ்ட் சதம் அடிப்பதையே நான் விரும்புகிறேன்.

தசாப்தத்திற்கு முன்பாக அப்படி பார்த்திருக்க மாட்டேன். இந்த தொடரில் சிறந்த அணிக்கு எதிராக அவர் நெருப்புடன் விளையாடி சிறந்த போட்டியை உருவாக்குவதை பார்க்க விரும்புகிறேன். அதுதான் விராட் கோலியும் தற்சமயத்தில் நினைத்துக் கொண்டிருப்பார் என்பது எனக்குத் தெரியும்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்