டி20 தொடர்: பாகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்து அசத்திய ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் இடையிலான 3-வது டி20 போட்டி இன்று நடைபெற்றது.

Update: 2024-11-18 11:16 GMT

ஹோபர்ட்,

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரு ஆட்டங்களிலும் ஜோஷ் இங்லிஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி விட்டது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி ஹோபர்ட்டில் இன்று நடைபெற்றது.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, ஆஸ்திரேலிய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 18.1 ஓவர்களில் 117 ரன்களில் சுருண்டது. அதிகபட்சமாக பாபர் அசாம் 41 ரன்கள் அடிக்க, ஆஸ்திரேலிய தரப்பில் ஆரோன் ஹார்டி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 118 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியது. வெறும் 11.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த அந்த அணி 118 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக மார்கஸ் ஸ்டோய்னிஸ் 27 பந்துகளில் 61 ரன்கள் குவித்தார்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை ஆஸ்திரேலியா முழுமையாக கைப்பற்றி பாகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்தது. மேலும் ஒருநாள் தொடரில் அடைந்த தோல்விக்கு பாகிஸ்தானை பழி தீர்த்துவிட்டது.

ஸ்டோய்னிஸ் ஆட்ட நாயகனாகவும், ஸ்பென்சர் ஜான்சன் தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்