ரோகித் சர்மா 50 வயது வரை விளையாடலாம் - இந்திய முன்னாள் வீரர்
ரோகித் சர்மா போன்ற தரமான வீரர் முடிந்தால் 50 வயது வரை இந்தியாவுக்கு விளையாடலாம் என்று யோக்ராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
மும்பை,
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோகித் சர்மா நவீன கிரிக்கெட்டில் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக போற்றப்படுகிறார். ஆரம்ப காலங்களில் மிடில் ஆர்டரில் தடுமாறினாலும் ஓப்பனிங்கில் களமிறங்கியது முதல் சிறப்பாக விளையாடி வரும் அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் 3 இரட்டை சதங்கள் அடித்துள்ளார்.
இந்நிலையில் ரோகித் சர்மா போன்ற தரமான வீரர் முடிந்தால் 50 வயது வரை இந்தியாவுக்கு விளையாடலாம் என்று முன்னாள் வீரர் மற்றும் யுவராஜ் சிங் தந்தையான யோக்ராஜ் சிங் தெரிவித்துள்ளார். மேலும் 37 வயதை தாண்டிய வீரர்களை இந்தியாவுக்காக தேர்வு செய்யக்கூடாது என்ற கோட்பாட்டை பி.சி.சி.ஐ. மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார். அதற்கான காரணத்தைப் பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு:-
"ஒருவர் இவ்வளவு வயதாகி விட்டார் என்று வயதைப் பற்றி பலரும் பேசுவதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. நீங்கள் 40, 42 அல்லது 45 வயதிலும் பிட்டாக இருக்கும் பட்சத்தில் தொடர்ந்து விளையாடுவதில் என்ன பிரச்சனை? நம்முடைய நாட்டில் ஒருவர் 40 வயதை தாண்டி விட்டால் அவர் அவ்வளவுதான் என்று மக்கள் நம்புகின்றனர். அத்துடன் அவருடைய நேரம் முடிந்து விட்டது என்று அனைவரும் நினைக்கின்றனர்.
ஆனால் உண்மையாக நீங்கள் முடிந்து விடவில்லை. இந்தியா உலகக்கோப்பையை வென்றபோது மோஹிந்தர் அமர்நாத்க்கு வயது 38. அவர் பைனலில் ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்திய கிரிக்கெட்டில் வயதை அடிப்படையாக வைத்து தேர்ந்தெடுக்கும் முறை அகற்றப்பட வேண்டும் என்று நினைக்கிறேன். ரோகித் சர்மா மற்றும் சேவாக் ஆகிய 2 மகத்தான வீரர்கள் எப்போதும் பிட்னஸ் பற்றி நினைத்ததில்லை. எனவே தம்மால் முடியும் பட்சத்தில் ரோகித் சர்மா 50 வயது வரை விளையாடலாம்" என்று கூறினார்.