கேப்டன் பொறுப்பு காரணமாக ரோகித் மிகவும் பலவீனமாகவும், குழப்பமாகவும் உள்ளார்- பாகிஸ்தான் முன்னாள் வீரர்

ஹாங்காங் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரோகித் மிகவும் பலவீனமாகவும், குழப்பமாகவும் தெரிந்தார் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் முகமது ஹபீஸ் கூறியுள்ளார்.;

Update:2022-09-02 12:06 IST

Image Courtesy: AFP

துபாய்,

ஆசிய கோப்பை போட்டியில் ஹாங்காங்கை வீழ்த்தி இந்திய அணி 'சூப்பர் 4' சுற்றுக்கு தகுதி பெற்றது. துபாயில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய இந்தியா நிர்ணயிக்கப் பட்ட 20 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 192 ரன் குவித்தது. பின்னர் ஆடிய ஹாங்காங் அணியால் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 152 ரன்னே எடுக்க முடிந்தது. இதனால் 40 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்திற்கு பின்னர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முகமது ஹபீஸ், ரோகித்தின் கேப்டன்சி குறித்து சில கருத்துகளை தெரிவித்துள்ளார். ரோகித் சர்மாவை பற்றி பாகிஸ்தான் முன்னாள் வீரர் முகமது ஹபீஸ் கூறுகையில்,

இந்திய அணி ஆடிய இரு ஆட்டங்களிலும் கேப்டன் ரோகித் சர்மா ஹாங்காங் அணிக்கு எதிராக 21 ரன்கள், பாகிஸ்தானுக்கு எதிராக 12 ரன்கள் எடுத்திருந்தார். அவர் சிறப்பாக ஆடுவது அணிக்கு மிகவும் அவசியம். சமீபகால கிரிக்கெட்டில் அவர் சிறந்த தொடக்க ஆட்டக்காரர். அவர் இப்படியே ஆடினால் அது அணிக்கு மிகவும் அழுத்தத்தை அதிகரிக்கும் என்று கூறினார்.

மேலும், ஹாங்காங் அணிக்கு எதிராக இந்திய அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். இந்த வெற்றிக்கு பின்னர் நீங்கள் ரோகித்தை பார்த்தீர்களா?. ரோகித் சர்மாவின் உடல் பாவனைகளை பற்றி பேசுகிறேன். அவர் டாஸ் போடுவதற்கு வந்த போதே மிகவும் பலவீனமாகவும், குழப்பமாகவும் தெரிந்தார்.

மிகப்பெரிய இன்னிங்ஸ் விளையாடும் ரோகித் சர்மாவை இதற்கு முன் நான் இப்படி பார்த்தது இல்லை. கேப்டன் பொறுப்பு அவருக்கு அதிகமாக அழுத்தங்களை கொடுத்துள்ளது என நான் நினைக்கிறேன். அவர் பல கஷ்டங்களை சந்திக்கிறார்.

அவரது பார்ம் குறைந்துள்ளது. அவர் ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக ஆடவில்லை. அவரது சிறப்பான ஆட்டத்தை நாம் காண முடியவில்லை. இந்தியாவின் கேப்டன் பொறுப்பு அவருக்கு மேலும் அழுத்தம் கொடுக்கிறது. அவர் கிரிக்கெட்டை பற்றி நிறைய கூறுகிறார், நேர்மறை எண்ணத்துடன் விளையாடும் அவரிடம் உடல் அசைவுகளில் அதை காண முடியவில்லை.

பேசுவது எளிது, ஆனால் செய்வது கடினம். இது என்னுடைய கணிப்பு அல்ல, இனி வரும் காலங்களில் அவர் தொடர்ந்து அணியை வழிநடத்துவது கடினமாக இருக்கும். அவரால் நீண்ட காலம் கேப்டன் பொறுப்பில் இருக்க முடியாமல் போகலாம். அவருக்காக நான் வருந்துகிறேன். இந்த விஷயத்தில் அவரோ அல்லது இந்திய குழு முடிவு செய்வார்கள் என்று நான் நினைக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்