மீண்டும் எழும் டைம்டு அவுட் சர்ச்சை... மோதிக்கொண்ட வங்காளதேசம் - இலங்கை வீரர்கள்

இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பையில் வங்காளதேசத்துக்கு எதிரான போட்டியில் இலங்கை வீரர் மேத்யூஸ் ’டைம்டு அவுட்’ முறையில் ஆட்டமிழந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

Update: 2024-03-10 17:03 GMT

image credit: @OfficialSLC

சிலெட்,

இலங்கை கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை இலங்கை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் வரும் 13-ம் தேதி நடைபெற உள்ளது.

முன்னதாக இந்தியாவில் நடைபெற்ற 2023 உலகக்கோப்பையில் வங்காளதேசத்துக்கு எதிரான போட்டியில் இலங்கை வீரர் மேத்யூஸ் வரலாற்றிலேயே முதல் முறையாக 'டைம்டு அவுட்' முறையில் அவுட்டான வீரர் என்ற பரிதாபமான சாதனை படைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

அப்போட்டியில் களமிறங்கிய பின் தம்முடைய ஹெல்மெட் பழுதாக இருந்ததால் அதை மேத்யூஸ் மாற்றுவதற்கு முயற்சித்தார். அப்போது வேண்டுமென்றே கால தாமதம் செய்வதாக நடுவரிடம் புகார் செய்த ஷகிப் அல் ஹசன் தலைமையிலான வங்காளதேசம் அணியினர் தங்களுக்கு அவுட் கொடுக்குமாறு நடுவரிடம் முறையிட்டது சர்ச்சை நிகழ்வாக அமைந்தது.

அந்த நிலையில் இந்த தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணியின் முதல் விக்கெட்டை எடுத்த வங்கதேச வீரர் சோரிபுல் இஸ்லாம் மேத்யூசை டைம்டு அவுட் முறையில் அவுட்டாக்கியதை கலாய்க்கும் வகையில் கொண்டாடினார். இறுதியில் 2 - 1 என்ற கணக்கில் தொடரை வென்ற இலங்கை அணி வீரர்கள் அனைவரும் டைம்டு அவுட் கொண்டாட்டம் செய்து சோரிபுல் இஸ்லாம் மற்றும் வங்காளதேச அணியினரை அவர்களுடைய சொந்த மண்ணில் கலாய்த்து தக்க பதிலடி கொடுத்தனர்.

அதனால் கடுப்பான வங்காளதேச அணியின் கேப்டன் நஜ்முல் சாண்டோ இன்னும் பழையதை நினைத்துக்கொண்டு அதிகம் கொண்டாடாமல் நிகழ்காலத்திற்கு வாருங்கள் என்று இலங்கை அணிக்கு பதிலடி கொடுத்துள்ளார். இது பற்றி தொடரின் முடிவில் நிகழ்ந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியது பின்வருமாறு;-

"இது ஆக்ரோஷமான கையாளுதல். அவர்கள் நேரம் முடிந்து விட்ட செய்கையை காட்டினார்கள் தானே? இதிலிருந்தே அவர்கள் அந்த சம்பவத்திலிருந்து (மேத்தியூஸ் விக்கெட்) இன்னும் நகரவில்லை என்பது தெரிகிறது. எனவே அவர்கள் அதிலிருந்து வெளியேறி நிகழ்காலத்திற்கு வர வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ஏனெனில் நாங்கள் விதிமுறைக்கு உட்பட்டுதான் அந்த அவுட்டை செய்தோம். ஆனாலும் அவர்கள் அதைப் பற்றி இன்னும் வெறித்தனமாக இருக்கின்றனர்" என்று கூறினார்.

 

Tags:    

மேலும் செய்திகள்