ஹீத் ஸ்ட்ரீக் இறந்ததாக பரவும் செய்தி தவறானது - ஹென்றி ஒலாங்கா
ஹீத் ஸ்ட்ரீக் இறந்ததாக பரவும் செய்தி தவறானது என ஜிம்பாப்வே முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹென்றி ஒலாங்கா தெரிவித்துள்ளார்.
ஹராரே,
ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஹீத் ஸ்ட்ரீக் புற்றுநோய் காரணமாக உயிரிழந்ததாக தகவல்கள் வெளியானது. அவர் மரணம் அடைந்ததாக கூறி கிரிக்கெட் வீரர்கள் இரங்கல் தெரிவித்து வந்தனர்.
ரவிச்சந்திரன் அஸ்வின், வீரேந்திர சேவாக், வாசிம் ஜாபர் போன்ற இந்திய நட்சத்திரங்களும் இயற்கை எய்திய அவருடைய குடும்பத்திற்கு இரங்கல் செய்திகளை டுவிட்டரில் பதிவிட்டனர்.
இந்நிலையில் ஹீத் ஸ்ட்ரீக் மரணம் அடையவில்லை என ஜிம்பாப்வே முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹென்றி ஒலாங்கா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
ஹீத் ஸ்ட்ரீக்கின் மறைவு பற்றிய வதந்திகள் மிகைப்படுத்தப்பட்டவை என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியும். நான் அவரிடம் தான் கேட்டேன். மூன்றாவது நடுவர் அவரை திரும்ப அழைத்துள்ளார். அவர் உயிருடன் இருக்கிறார் மக்களே. என பதிவிட்டுள்ளார்.