ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்
38 அணிகள் பங்கேற்கும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது.
புதுடெல்லி,
இந்தியாவின் பிரபலமான முதல்தர கிரிக்கெட்டான ரஞ்சி கோப்பை போட்டி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி இந்த சீசனுக்கான 90-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் (4 நாள் ஆட்டம்) டெல்லி, ஜெய்ப்பூர், லக்னோ, நாக்பூர், இந்தூர் உள்பட பல்வேறு நகரங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. அடுத்த ஆண்டு மார்ச் 2-ந் தேதி வரை இந்த போட்டி நடக்கிறது.
இதில் மொத்தம் 38 அணிகள் பங்கேற்கின்றன. தமிழக அணி 'டி' பிரிவில் இடம் பெற்றுள்ளது. அசாம், சண்டிகார், சத்தீஷ்கார், டெல்லி, ஜார்கண்ட், ரெயில்வே, சவுராஷ்டிரா அந்த பிரிவில் உள்ள மற்ற அணிகளாகும்.
இந்த போட்டியில் இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் அய்யர், ரஹானே, பிரித்வி ஷா, அபிமன்யு ஈஸ்வரன், விருத்திமான் சஹா , ருதுராஜ் கெய்க்வாட், சாய் சுதர்சன், புஜாரா, ஹனுமா விஹாரி, மயங்க் அகர்வால் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் களம் காண உள்ளனர்.
இதனால் இந்த தொடர் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக ஆல்-ரவுண்டர் பாபா அபராஜித் இந்த சீசனில் கேரளா அணிக்காக ஆடுகிறார். முதல் ரவுண்டில் மொத்தம் 16 லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. இதில் தமிழ்நாடு- சவுராஷ்டிரா அணிகள் இடையிலான ஆட்டம் கோவையில் இன்று தொடங்குகிறது.