ரஞ்சி கிரிக்கெட்: குஜராத்துக்கு மிக குறைந்த ஸ்கோரை இலக்காக நிர்ணயித்து வெற்றி பெற்ற விதர்பா அணி
இந்தியாவில் முதல்தர கிரிக்கெட் வரலாற்றில் மிக குறைந்த ஸ்கோரை இலக்காக நிர்ணயித்து வெற்றி பெற்ற அணி என்ற பெருமையை விதர்பா பெற்றது.
நாக்புர்,
ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் நாக்பூரில் 'டி' பிரிவில் நடந்த விதர்பாவுக்கு எதிரான ஆட்டத்தில் 73 ரன்கள் இலக்கை கூட எட்ட முடியாமல் குஜராத் அணி 2-வது இன்னிங்சில் 33.3 ஓவர்களில் வெறும் 54 ரன்னில் சுருண்டு போனது. இதனால் விதர்பா அணி 18 ரன் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றியை ருசித்தது.
இதன் மூலம் இந்தியாவில் முதல்தர கிரிக்கெட் வரலாற்றில் மிக குறைந்த ஸ்கோரை இலக்காக நிர்ணயித்து வெற்றி பெற்ற அணி என்ற பெருமையை விதர்பா பெற்றது. விதர்பா இடக்கை சுழற்பந்து வீச்சாளர் ஆதித்யா சர்வாதே 6 விக்கெட்டுகளை அள்ளி ஹீரோவாக ஜொலித்தார்.
இதற்கு முன்பு 1949-ம் ஆண்டு ரஞ்சி கிரிக்கெட்டில் டெல்லிக்கு எதிராக பீகார் அணி 78 ரன்களை இலக்காக நிர்ணயித்து 29 ரன் வித்தியாசத்தில் வெற்றி கண்டதே, இந்த வகையில் குறைந்த இலக்காக இருந்தது குறிப்பிடத்தக்கது.