ரஞ்சி கிரிக்கெட்: ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சவுராஷ்டிரா வெற்றி

மும்பை-சத்தீஷ்கர் (பி பிரிவு) இடையேயான ஆட்டம் டிராவில் முடிந்தது.

Update: 2024-02-12 19:47 GMT

கோப்புப்படம் 

ஜெய்ப்பூர்,

89-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெறும்.

இதில் ஜெய்ப்பூரில் நடந்த நடப்பு சாம்பியன் சவுராஷ்டிரா-ராஜஸ்தான் (ஏ பிரிவு) இடையிலான ஆட்டத்தில் முதல் இன்னிங்சில் சவுராஷ்டிரா 328 ரன்னும், ராஜஸ்தான் 257 ரன்னும் எடுத்தன. 71 ரன் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய சவுராஷ்டிரா அணி 3-வது நாள் முடிவில் 4 விக்கெட்டுக்கு 174 ரன்கள் எடுத்திருந்தது.

கடைசி நாளில் தொடர்ந்து ஆடிய சவுராஷ்டிரா 6 விக்கெட்டுக்கு 234 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. இதைத்தொடர்ந்து 306 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ராஜஸ்தான் அணி 28.4 ஓவர்களில் 87 ரன்னில் சுருண்டது. இதனால் சவுராஷ்டிரா 218 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது. சவுராஷ்டிரா தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் தர்மேந்திரசிங் ஜடேஜா 7 விக்கெட்டும், யுவராஜ் சிங் டோடியா 3 விக்கெட்டும் சாய்த்தனர்.

ராய்ப்பூரில் நடைபெற்ற மும்பை-சத்தீஷ்கர் (பி பிரிவு) இடையேயான ஆட்டம் டிராவில் முடிந்தது. முதல் இன்னிங்சில் மும்பை 351 ரன்னும், சத்தீஷ்கர் 350 ரன்னும் எடுத்தன. 2-வது இன்னிங்சில் ஒரு விக்கெட்டுக்கு 97 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் கடைசி நாளில் தொடர்ந்து ஆடிய மும்பை அணி ஆட்ட நேரம் முடிவில் 6 விக்கெட்டுக்கு 253 ரன்கள் எடுத்தது. மும்பை அணி (30 புள்ளி) தனது பிரிவில் முதலிடத்தில் நீடிக்கிறது. 

Tags:    

மேலும் செய்திகள்