முதுகு வலியோட இந்திய அணியை காப்பாற்றினார் - அஸ்வினை பாராட்டிய புஜாரா
இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் 7-ம் தேதி தரம்சாலாவில் தொடங்குகிறது.;
மும்பை,
இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் 7-ம் தேதி தரம்சாலாவில் தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட இந்த பெரிய தொடரில் 4 போட்டிகளின் முடிவிலேயே 3 - 1 என்ற கணக்கில் இந்திய அணி வென்றுள்ளது. இதைத் தொடர்ந்து தரம்சாலாவில் இந்தியாவின் நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தன்னுடைய 100-வது டெஸ்ட் போட்டியில் விளையாடி சாதனை படைக்க உள்ளார்.
அஸ்வின் 100-வது டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளதை முன்னிட்டு அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் கடந்த 2021ம் ஆண்டு சிட்னியில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தோல்வியை சந்திக்க வேண்டிய இந்தியாவை தமது இடத்தில் விகாரியுடன் சேர்ந்து முதுகு வலியுடன் அஸ்வின் காப்பாற்றியதை பற்றி புஜாரா நினைவு கூர்ந்து பாராட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது, அஸ்வின் ஒரு பேட்ஸ்மேனாகவும் விளையாடக் கூடியவர் என்பதை நாம் அறிவோம். 2021-ல் சேப்பாக்கத்தில் அவருடைய மேட்ச் வின்னிங் பேட்டிங் மற்றும் பவுலிங் போற்றப்பட வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் 2021 சிட்னி டெஸ்டில் மோசமான முதுகு வலியுடன் அவர் பேட்டிங் செய்து இந்தியாவை காப்பாற்றியது நீண்ட காலம் பேசப்படும்.
அந்தப் போட்டியில் 5-வது நாள் தோல்வியை தவிர்க்க போராடிய இந்தியாவுக்கு அவர் தேநீர் இடைவெளிக்கு பின் அவுட்டான என்னுடைய இடத்தில் பேட்டிங் செய்தார். அந்த தேநீர் இடைவேளையில் முதுகு வலியை கொண்டிருந்த அவர் தோல்வியை நினைத்து கவலைப்பட வேண்டாம் என்று என்னிடம் சொன்னது இப்போதும் நினைவிருக்கிறது.
பொதுவாக உங்களுடைய முதுகு காயத்தை சந்தித்தால் பந்துகளை அடிக்காமல் விடுவது கடினமாகும். குறிப்பாக நீங்கள் சரியாக நிற்க முடியாது என்பதால் பவுன்சர் பந்துகளை சரியாக விட முடியாது. அதே போல ஸ்பின்னர்களுக்கு எதிராக பந்தை தடுப்பது கடினமாகும்.ஆனால் அவற்றையெல்லாம் தாண்டி அவரும் தசைப் பிடிப்பால் அவதிப்பட்ட விகாரியும் பார்ட்னர்ஷிப் அமைத்து நம்மை காப்பாற்றினர். இவ்வாறு அவர் கூறினார்.