இந்திய டெஸ்ட் தொடருக்காக நான் நீண்ட காலம் தயாரானேன் - ஆட்டநாயகன் ஒல்லி போப்

இந்தியா - இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் ஆட்ட நாயகன் விருது ஒல்லி போப்பிற்கு வழங்கப்பட்டது.

Update: 2024-01-28 15:49 GMT

image courtesy; ICC

ஐதராபாத்,

இந்தியாவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐதராபாத் நகரில் கடந்த 25-ம் தேதி தொடங்கிய இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 246 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 70 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக அஸ்வின் மற்றும் ஜடேஜா தலா 3 விக்கெட்டுகள் சாய்த்தனர்.

அதைத்தொடர்ந்து விளையாடிய இந்தியா முதல் இன்னிங்சில் சிறப்பாக செயல்பட்டு 436 ரன்கள் குவித்து அசத்தியது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா, 87 ராகுல் 86, ஜெய்ஸ்வால் 80 ரன்கள் எடுக்க இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக ஜோ ரூட் 4 விக்கெட்டுகள் எடுத்தார்.

அதை தொடர்ந்து 190 ரன்கள் பின்னிலையுடன் 2-வது இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்துக்கு நெருக்கடியான நேரத்தில் ஒல்லி போப் அபாரமாக விளையாடி 196 ரன்கள் குவித்து அசத்தினார். இதன் மூலம் இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 420 ரன்கள் குவித்தது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக பும்ரா 4 விக்கெட்டுகள் எடுத்தார்.

இதனையடுத்து 231 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா சுமாராக பேட்டிங் செய்து 202 ரன்களில் ஆல் அவுட்டாகி தோல்வியை சந்தித்தது. இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக டாம் ஹார்ட்லி 7 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்த போட்டியின் ஆட்ட நாயகன் விருது ஒல்லி போப்பிற்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில் சவாலான இந்தியாவில் அடித்த 196 ரன்கள்தான் தன்னுடைய சிறந்த சதம் என்று ஆட்ட நாயகன் ஒல்லி போப் தெரிவித்துள்ளார். மேலும் இந்திய வீரர்கள் சில கேட்ச்களை கோட்டை விட்டது தமக்கு அதிர்ஷ்டத்தை கொடுத்ததாக தெரிவிக்கும் அவர் இது குறித்து பேசியது பின்வருமாறு;-

"என்னுடைய 100% சிறந்த இன்னிங்ஸ். இந்தியா போன்ற பேட்ஸ்மேன்களுக்கு சவாலான நாட்டில் தொடரை வெற்றியுடன் துவக்குவதற்கு உதவிய இந்த சதத்தால் என்னுடைய மற்ற 4 சதங்களை விட அதிகமாக பெருமை கொள்கிறேன். 2வது இன்னிங்சில் எனக்கு சில அதிர்ஷ்டம் (கேட்ச்) கிடைத்தது. நான் இன்சைட் எட்ஜ்ஜை கவர் செய்வதில் கவனம் செலுத்தினேன். மேலும் ஸ்வீப் மற்றும் ரிவர்ஸ் ஸ்வீப்பில் நேர்மறையான மனநிலையுடன் செயல்பட்டேன். இந்த தொடருக்கு நான் நீண்ட காலமாக தயாரானேன். இந்த தொடருக்காக என்னுடைய ஆட்டத்தில் சிறிய மாற்றத்தை மட்டும் செய்தேன்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்