மனைவி நடாஷாவை 2-வது முறையாக திருமணம் செய்து கொள்ளும் பாண்ட்யா...!
பாண்ட்யாவுக்கும், செர்பிய நடிகை நடாஷாவுக்கும் 2020-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
உதய்பூர்,
இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யா மற்றும் நடாஷா ஸ்டான்கோவிக் ஆகியோருக்கு மீண்டும் பிரமாண்ட முறையில் திருமணம் நடக்கவிருப்பதால் ரசிகர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் கே.எல்.ராகுல் சமீபத்தில் பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகளும் நடிகையுமான ஆதியா ஷெட்டியை திருமணம் செய்துக்கொண்டார்.
இதே போல மற்றொரு ஸ்டார் வீரர் அக்ஷர் பட்டேலும் திருமணத்தை நடந்தி முடித்தார். இந்நிலையில் தான் இந்திய டி20 கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவும் திருமணம் செய்துக்கொள்ளப் போவதாக அறிவித்துள்ளார். தனது மனைவி நடாஷாவை தான் மீண்டும் திருமணம் செய்துக்கொள்ளப் போகிறாராம்.
ஹர்திக் பாண்ட்யாவும், செர்பியாவை சேர்ந்த நடிகையுமான நடாஷா ஸ்டான்கோவிக் ஆகியோருக்கும் கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரியில் நிச்சயதார்த்தம் நடந்து மே மாதத்திலேயே திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போதே கர்ப்பமாக இருந்த நடாஷாவுக்கு 2020-ம் ஆண்டு ஜூலையில் ஆண் குழந்தை பிறந்தது.
திருமணமாகி 3 ஆண்டுகள் நிறைவடையவுள்ள சூழலில் தற்போது பிரமாண்ட திருமணத்திற்கு ஆசைப்பட்டுள்ளனர். இந்த ஜோடிக்கு திருமணம் நடந்த போது இந்தியாவில் கொரோனா தாக்குதல் உச்சகட்டத்தில் இருந்தது. இதனால் நண்பர்கள், உறவினர்கள் யாரையும் பெரியளவில் அழைக்க முடியாமல் மிகவும் எளிமையாக செய்துவிட்டனர்.
எனவே காதலர் தினமான இன்று திருமணத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர். தற்போது இந்திய வீரர்கள் எவ்வித போட்டியும் இல்லாமல் உள்ளனர் என்பதால் அனைவரும் கலந்துக்கொள்ள வாய்ப்புள்ளது.
2-வது முறையாக திருமணம் என்றாலும் அது சாதாரணமாக இருக்கக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார் ஹர்திக் பாண்ட்யா. ஏனென்றால் திருமணத்திற்காக ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள பிரமாண்ட அரண்மனை ஒன்றை முழுவதுமாக வாடகைக்கு எடுத்துள்ளார். அங்கு திரைப்படங்களில் காட்டப்படுவதை போல பல கோடிகள் செலவில் மிகப்பெரிய வண்ண விளக்குகளால் அலங்கரித்துள்ளனர்.
பாண்ட்யாவின் திருமண நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர், நடிகைகள், கிரிக்கெட் உலகின் நட்சத்திரங்கள் அனைவருக்கும் பலமான விருந்து பரிமாரப்படவுள்ளது. அவர்களுக்காக ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலத்தின் உயரிய உணவுகள் தயாரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.