ஐபிஎல் தொடரில் விளையாட ஆர்வம் தெரிவிக்கும் பாகிஸ்தான் வீரர்!
2009ஆம் ஆண்டுக்கு பின் இருநாட்டுக்கும் இடையே ஏற்பட்ட எல்லை பிரச்சனை காரணமாக பாகிஸ்தான் வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
லாகூர்,
இந்தியாவில் நடத்தப்படும் உள்ளூர் டி20 தொடரான ஐபிஎல்-ன் 17-வது சீசன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக அந்த சீசனுக்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் 19-ந்தேதி துபாயில் நடக்க உள்ளது.
உலக கிரிக்கெட் வீரர்களுக்கும் ரசிகர்களுக்கும் மிகவும் பிடித்த தொடராக நடைபெற்று வரும் ஐபிஎல்-ல் பாகிஸ்தானை சேர்ந்த வீரர்கள் மட்டும் விளையாட முடியாமல் தவித்து வருகிறார்கள். கடந்த 2008ஆம் ஆண்டு ஐபிஎல் துவங்கப்பட்ட போது சோயப் அக்தர், சல்மான் பட், சோகைல் தன்விர், கம்ரான் அக்மல் போன்ற பாகிஸ்தான் வீரர்கள் விளையாடினர். ஆனால் 2009ஆம் ஆண்டுக்கு பின் இருநாட்டுக்கும் இடையே ஏற்பட்ட எல்லை பிரச்சனை காரணமாக பாகிஸ்தான் வீரர்கள் இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஐபிஎல் தொடரில் விளையாடுவது ஒவ்வொரு வீரரின் கனவாக இருக்கும் என்று பாகிஸ்தான் வீரர் ஹசன் அலி தெரிவித்துள்ளார். எனவே தமக்கு வாய்ப்பு கிடைத்தால் நிச்சயமாக ஐபிஎல் தொடரில் விளையாட ஆர்வத்துடன் இருப்பதாக தெரிவிக்கும் அவர் இது குறித்து பேசியது பின்வருமாறு;- "ஒவ்வொரு வீரர்களும் ஐபிஎல் தொடரில் விளையாட விரும்புவார்கள். நானும் அங்கே விளையாட விரும்புகிறேன். ஏனெனில் அது இந்த உலகிலேயே விளையாடப்படும் மிகப்பெரிய லீக் தொடர்களில் ஒன்றாகும். எனவே வருங்காலங்களில் ஐபிஎல் தொடரில் வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நான் விளையாடுவேன்" என்று கூறினார்.