இலங்கை - பாகிஸ்தான் இடையேயான டெஸ்ட் ; 2-ம் நாள் ஆட்டம் மழையால் ரத்து

இலங்கை - பாகிஸ்தான் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டியின் 2-ம் நாள் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-07-25 10:58 GMT

image courtesy; twitter/@OfficialSLC

கொழும்பு,

இலங்கைக்கு சென்றுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட்டில் பாகிஸ்தான் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 2- வது டெஸ்ட் கொழும்புவில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. பாகிஸ்தான் அணியின் சிறப்பான பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் முதல் நாளிலேயே இலங்கை அணி முதல் இன்னிங்சில் 166 ரன்களில் ஆட்டம் இழந்தது. பாகிஸ்தான் தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் அப்ரார் அகமது 4 விக்கெட்டுகளையும், வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனை அடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 28.3 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 145 ரன்கள் எடுத்து இருந்தது. இமாம் உல்-ஹக் 6 ரன்னிலும், ஷான் மசூத் 51 ரன்னிலும் அவுட் ஆகினர். அப்துல்லா ஷபிக் 74 ரன்களுடனும் (99 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்), கேப்டன் பாபர் அசாம் 8 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 2-ம் நாள் ஆட்டம் நடைபெற்றது. ஆட்டம் தொடங்கிய சில ஓவர்களிலேயே மழை குறுக்கிட்டது. 2-ம் நாள் ஆட்டத்தில் 10  ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டிருந்த நிலையில் மழை குறுக்கிட்டதால்  ஆட்டம் நிறுத்தப்பட்டது. பாகிஸ்தான் 2 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்துள்ளது. இதன் மூலம் இலங்கையை விட 12 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. அப்துல்லா ஷபிக் 87 ரன்களுடனும்,பாபர் அசாம் 28 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். மழை தொடர்ந்து பெய்ததால் 2 ம் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. 2-ம் நாள் ஆட்டம் ரத்தானாலும் இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி வலுவான நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்