பதும் நிசங்கா அபார சதம்... ஆப்கானிஸ்தானை ஒயிட்வாஷ் செய்த இலங்கை
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 266 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
கொழும்பு,
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 1 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இதில் டெஸ்ட் தொடரை இலங்கை அணி கைப்பற்றியது. இதையடுத்து நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் 2 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இரு ஆட்டங்களிலும் இலங்கை அணி வெற்றி பெற்று தொடரில் 2-0 என முன்னிலையில் இருந்தது.
இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 48.2 ஒவர்களில் 266 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆப்கானிஸ்தான் அணி தரப்பில் ரஹ்மத் 65 ரன், ஓமர்சாய் 54 ரன் எடுத்தனர்.
இதையடுத்து 267 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி விளையாடியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பதும் நிசங்கா மற்றும் அவிஷ்கா பெர்னண்டோ ஆகியோர் களமிறங்கினர். அதிரடியாக விளையாடிய இருவரும் அணியை வெற்றி பாதையை நோக்கி கம்பீரமாக பயணிக்க வைத்தனர். சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவிஷ்கா பெர்னண்டோ 91 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் சிறப்பாக விளையாடிய நிசங்கா சதமடித்து அசத்தினார்.
முடிவில் வெறும் 35.2 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த இலங்கை அணி இலக்கை கடந்து வெற்றி பெற்றது. இலங்கை அணியில் அதிகபட்சமாக பதும் நிசங்கா 118 ரன்கள் குவித்தார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இலங்கை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி ஆப்கானிஸ்தானை ஒயிட்வாஷ் செய்தது.
இந்த போட்டியின் ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை இலங்கை அணியின் பதும் நிசங்கா தட்டி சென்றார்.