'மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப எங்களது செயல்பாடு இல்லை' - பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம்

முதலாவது டெஸ்டும் டிராவில் முடிந்திருந்ததால் 2 போட்டிகள் கொண்ட இந்த தொடர் 0-0 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.

Update: 2023-01-06 22:35 GMT

கராச்சி,

பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் கராச்சியில் கடந்த 2-ந்தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே நியூசிலாந்து 449 ரன்களும், பாகிஸ்தான் 408 ரன்களும் குவித்தன 41 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து 5 விக்கெட்டுக்கு 277 ரன்களுடன் 'டிக்ளேர்' செய்து 319 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

சவாலான இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் 4-வது நாள் முடிவில் ரன் கணக்கை தொடங்கும் முன்பே 2.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து அதிர்ச்சிக்குள்ளானது. இந்த நிலையில் 5-வது மற்றும் கடைசி நாளான நேற்று பாகிஸ்தான் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதையடுத்து 6-வது விக்கெட்டுக்கு விக்கெட் கீப்பர் சர்ப்ராஸ் அகமதுவும், சாத் ஷகிலும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். கடைசி 8 ஓவர்களுக்கு பாகிஸ்தானின் வெற்றிக்கு 33 ரன் தேவைப்பட்டது. சிறிது நேரத்தில் சர்ப்ராஸ் அகமது 118 ரன்களில் (176 பந்து, 9 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஆட்டமிழந்தார்.

இறுதியாக வெற்றிக்கு 15 ரன் தேவை, 3 ஓவர் எஞ்சியிருந்தது. இப்படிப்பட்ட திரில்லிங்கான சூழலில் சூரியன் மறைந்து வெளிச்சம் குறைந்ததால், அத்துடன் ஆட்டத்தை முடித்துக் கொள்ள நடுவர்கள் அறிவுறுத்தினர். இதையடுத்து பாகிஸ்தான் அணி 2-வது இன்னிங்சில் 90 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 304 ரன்கள் எடுத்திருந்த போது போட்டி டிராவில் முடித்துக் கொள்ளப்பட்டது.

முன்னதாக முதலாவது டெஸ்டும் டிராவில் முடிந்திருந்ததால் 2 போட்டிகள் கொண்ட இந்த தொடர் 0-0 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. அடுத்து இவ்விரு அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது. இதன் முதலாவது ஆட்டம் வருகிற 9-ந்தேதி கராச்சியில் நடக்கிறது.

இந்த போட்டி குறித்து நியூசிலாந்து கேப்டன் டிம் சவுதி கூறுகையில், 'வெற்றிக்காக எல்லா முயற்சிகளையும் நாங்கள் மேற்கொண்டோம். ஆனால் சர்ப்ராஸ் அகமது விளையாடிய விதத்தால் வாய்ப்பு போய் விட்டது. அடுத்து ஒரு நாள் தொடரில் சில வெற்றிகளை பெற முயற்சிப்போம் ' என்றார்.

பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் கூறுகையில், 'தேநீர் இடைவேளைக்கு பிறகு இலக்கை விரட்டி பிடிக்கும் முனைப்புடன் ஆடுவது என்பது தான் எங்களது திட்டம். மிடில் வரிசையில் வலுவான பார்ட்னர்ஷிப் கிடைத்திருந்தால் எங்களது வியூகம் வேறு மாதிரி இருந்திருக்கும். ஒட்டுமொத்தத்தில் மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப எங்களது செயல்பாடு இல்லை' என்று தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்