ஒரு ஆட்டம் 37 ஓவருக்குள் முடிவதை நாம் அடிக்கடி பார்க்க முடியாது - ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்டீவன் சுமித்

இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டிக்கான வெற்றிக்கு பிறகு, எங்களுக்கு எல்லாம் சரியாக அமைந்த நாட்களில் இதுவும் ஒன்று என்று ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்டீவன் சுமித் கூறினார்.

Update: 2023-03-19 22:28 GMT

image courtesy: ICC via ANI

விசாகப்பட்டினம்,

இந்தியா -ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடந்தது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில் இந்தியா 26 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 117 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது.

118 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களம் புகுந்த ஆஸ்திரேலியா 11 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 121 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது ஆஸ்திரேலியா. தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் 3-வது ஒருநாள் போட்டி சென்னையில் வருகிற 22-ம் தேதி நடைபெறுகிறது.

இந்த நிலையில் தோல்விக்கு பிறகு இந்திய கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், 'தோல்வி மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. பேட்டிங்கில் நாங்கள் எங்களது திறமைக்கு ஏற்ப விளையாடவில்லை. இது 117 ரன்னுக்குரிய ஆடுகளம் கிடையாது. மளமளவென விக்கெட்டுகளை இழந்ததால் போதிய ரன் எடுக்க முடியவில்லை. விக்கெட் சரிந்தாலும் மீண்டு வந்து விடுவோம் என்று நினைத்தேன்.

ஆனால் இன்று எங்களுக்குரிய நாளாக அமையவில்லை. மிட்செல் ஸ்டார்க் தரமான பவுலர். ஆஸ்திரேலிய அணிக்காக பல ஆண்டுகள் புதிய பந்தில் சிறப்பாக பந்து வீசி வருகிறார். அது தான் அவரது பலம். அவரது பலத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் வீழ்ந்து விட்டோம். இதை புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப நாம் விளையாட வேண்டியது முக்கியம்.

காயமடைந்துள்ள ஸ்ரேயாஸ் அய்யர் எப்போது திரும்புவார் என்பது தெரியாது. இப்போதைக்கு அவரது இடத்தில் சூர்யகுமார் யாதவ் விளையாடுகிறார். வெள்ளை நிற பந்து கிரிக்கெட்டில் ரன் குவிப்பதை அவர் பல முறை நிரூபித்து இருக்கிறார். 50 ஓவர் வடிவிலான போட்டியில் என்ன செய்ய வேண்டும் என்பது அவருக்கு தெரியும். முதல் 2 ஆட்டத்திலும் அவர் சோபிக்கவில்லை தான். ஆனால் 7-8 அல்லது 10 ஆட்டங்களில் தொடர்ந்து விளையாடும் போது, இந்த வடிவிலான போட்டியில் தன்னை நிலைநிறுத்தி சவுகரியமாக விளையாடும் சூழல் அவருக்கு உருவாகி விடும்' என்றார்.

ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித் கூறுகையில், 'இந்த ஆடுகளத்தன்மை எப்படி இருக்கும்? எந்தளவுக்கு பந்து ஸ்விங் ஆகும்? எத்தனை ரன்கள் இங்கு சவாலான ஸ்கோராக இருக்கும்? என்று எதுவும் தெரியாத நிலையில் அதிர்ஷ்டவசமாக இந்திய பேட்ஸ்மேன்களை நெருக்கடிக்குள்ளாக்கி சீக்கிரம் வீழ்த்தி விட்டோம். புதிய பந்தில் ஸ்டார்க் அபாரமாக பந்து வீசினார். ஒரு ஆட்டம் 37 ஓவருக்குள் (இரு இன்னிங்சையும் சேர்த்து) முடிவதை நாம் அடிக்கடி பார்க்க முடியாது. எங்களுக்கு எல்லாம் சரியாக அமைந்த நாட்களில் இதுவும் ஒன்று' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்