50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அதிகாரபூர்வ முழு அட்டவணை

50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

Update: 2023-06-28 00:24 GMT

மும்பை,

50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் அட்டவணை நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதன்படி ஆமதாபாத்தில் அக்டோபர் 5-ந்தேதி நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

உலகக் கோப்பை கிரிக்கெட்

10 அணிகள் பங்கேற்கும் 13-வது 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் வருகிற அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த போட்டிக்கு இந்தியா, ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வங்காளதேசம், நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா ஆகிய 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றன. ஜிம்பாப்வேயில் நடந்து வரும் தகுதி சுற்று முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் எஞ்சிய 2 அணிகளாக உலகக் கோப்பை போட்டியில் கலந்து கொள்ளும்.

இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் 'டாப்-4' இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

அட்டவணை அதிகாரபூர்வ அறிவிப்பு

உலகக் கோப்பை போட்டி அட்டவணை வழக்கமாக ஒரு ஆண்டுக்கு முன்பாகவே வெளியிடப்படும். ஆனால் இந்த உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணி பங்கேற்குமா? என்பதில் நிலவிய குழப்பம் மற்றும் மழை சீசனுக்கு தகுந்தபடி ஆட்டங்களுக்கான இடங்களை தேர்வு செய்வதில் ஏற்பட்ட நடைமுறை சிக்கல் உள்ளிட்ட பிரச்சினை காரணமாக தாமதமாகி வந்தது. நீண்ட இழுபறிக்கு பிறகு ஒரு வழியாக போட்டிக்கு 100 நாட்கள் இருக்கையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியம் மும்பையில் நேற்று உலக கோப்பை அட்டவணையை அதிகாகரபூர்வமாக வெளியிட்டது.

பேராவலுடன் எதிர்பார்க்கப்படும் இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் அக்டோபர் 5-ந் தேதி தொடங்குகிறது. முதலாவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி, கடந்த முறை 2-வது இடம் பிடித்த நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.

நவம்பர் 19-ந் தேதி வரை 46 நாட்கள் அரங்கேறும் இந்த கிரிக்கெட் திருவிழாவில் 45 லீக் மற்றும் இரண்டு அரைஇறுதி, இறுதிப்போட்டி என மொத்தம் 48 ஆட்டங்கள் நடக்கின்றன. ஆமதாபாத், பெங்களூரு, சென்னை, டெல்லி, தர்மசாலா, ஐதராபாத், கொல்கத்தா, லக்னோ, மும்பை, புனே ஆகிய 10 நகரங்களில் போட்டி நடைபெறுகிறது.

அரைஇறுதிப்போட்டிகள் முறையே நவம்பர் 15, 16-ந் தேதிகளில் மும்பை வான்கடே, கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானங்களிலும், இறுதிப்போட்டி (நவ.19) ஆமதாபாத்தில் உள்ள உலகின் பெரிய மைதானங்களில் ஒன்றான நரேந்திர மோடி ஸ்டேடியத்திலும் நடைபெறுகிறது.

இந்திய அணி அரைஇறுதிக்கு தகுதி பெற்றால் முதலாவது அரைஇறுதி மும்பையில் நடைபெறும் என்றும், அரைஇறுதியில் இந்திய அணியை எதிர்த்து பாகிஸ்தான் ஆடும் சூழ்நிலை ஏற்பட்டால் அந்த ஆட்டம் கொல்கத்தாவில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரைஇறுதி மற்றும் இறுதிப்போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் மாற்று நாளில் (ரிசர்வ் டே) நடைபெறும் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.



இந்தியா - பாகிஸ்தான் மோதல்

இந்த போட்டி தொடரில் 6 பகல் ஆட்டங்கள் நடக்கிறது. அவை காலை 10.30 மணிக்கு தொடங்கும். மற்றவை அனைத்தும் பகல்-இரவு ஆட்டங்களாகும். அந்த ஆட்டங்கள் பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி நடைபெறும்.

போட்டியை நடத்தும் இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுடன் அக்டோபர் 8-ந் தேதி சென்னையில் மோதுகிறது. இந்திய அணி தனது லீக் ஆட்டங்களை 9 நகரங்களில் ஆடுகிறது. அதற்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலிய அணி தனது லீக் ஆட்டங்களை 8 இடங்களில் விளையாடுகிறது.

பரபரப்புடன் எதிர்பார்க்கப்படும் பரம எதிரிகளான இந்தியா-பாகிஸ்தான் இடையிலான லீக் ஆட்டம், 1 லட்சத்து 32 ஆயிரம் ரசிகர்கள் அமரும் வசதி கொண்ட ஆமதாபாத் ஸ்டேடியத்தில் அக்டோபர் 15-ந் தேதி நடக்க உள்ளது.

பயிற்சி ஆட்டங்கள்

உலகக் கோப்பை போட்டிக்கு முன்னதாக பயிற்சி ஆட்டங்கள் ஐதராபாத், திருவனந்தபுரம், கவுகாத்தியில் செப்டம்பர் 29-ந் தேதி முதல் அக்டோபர் 3-ந் தேதி வரை நடக்கிறது.

50 ஓவர் உலகக் கோப்பை போட்டியை இந்தியா நடத்துவது இது 4-வது முறையாகும். முன்னதாக 1987, 1996, 2011-ம் ஆண்டுகளில் ஆசிய நாடுகளுடன் இணைந்து இந்த போட்டியை நடத்தி இருந்தது. தற்போது முதல்முறையாக தனியாக இந்த போட்டியை நடத்துகிறது.

ஆசிய அணிகளுக்கு சாதகம் - முரளிதரன்

மும்பையில் நடந்த உலகக் கோப்பை அட்டவணை வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற இலங்கை முன்னாள் சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் முத்தையா முரளிதரன் கூறுகையில், 'இந்தியாவில் உலக கோப்பை போட்டி நடப்பது ஆசிய கண்டத்தை சேர்ந்த அணிகளுக்கு சாதகமாக இருக்கும். 1987-ம் ஆண்டு தவிர ஆசியாவில் நடந்த அனைத்து உலககோப்பை தொடரிலும் இறுதிசுற்றுக்கு ஆசிய அணிகள் தான் வந்துள்ளன. இந்த முறை இறுதிப்போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதலாம். உள்ளூர் சூழலில் ஆடுவதால் உலகக் கோப்பையை வெல்வதற்கு இந்தியாவுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கருதுகிறேன். உலக கோப்பையை பொறுத்தவரை திறமையை விட வீரர்களின் மனநிலையும் முக்கிய பங்கு வகிக்கிறது. வீரர்கள் நேர்மறையான எண்ணத்துடன் விளையாட வேண்டும்' என்றார்.



 


Tags:    

மேலும் செய்திகள்