தோனி அல்ல...'ஒரிஜினல் கேப்டன் கூல்' இவர் தான் - முன்னாள் வீரரை பாராட்டிய சுனில் கவாஸ்கர் ...!

இந்திய கிரிக்கெட்டின் கேப்டன் கூல் என தோனி ரசிகர்களால் அழைக்கப்படுகிறார்.

Update: 2023-06-26 11:32 GMT

மும்பை,

இந்திய கிரிக்கெட்டின் கேப்டன் கூல் என மகேந்திர சிங் தோனி ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுகிறார். அவரது தலைமையில் இந்திய அணி 50 ஓவர் உலகக்கோப்பை, 20 ஓவர் உலகக்கோப்பை, சான்பியன்ஸ் டிராபி ஆகிய கோப்பைகளை கைப்பற்றி உள்ளது.

எந்த ஒரு கடினமான சூழ்நிலையிலும் அவர் தனது கோபத்தை வெளிகாட்டி கொள்ள மாட்டார். எனவே மகேந்திர சிங் தோனியை கேப்டன் கூல் என ரசிகர்கள் மட்டுமின்றி முன்னாள் வீரர்களும் அன்போடு அழைத்து வந்தனர்.

இந்நிலையில் ஒரிஜினல் கேப்டன் கூல் கபில் தேவ் தான் என இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறும்போது,

1983 உலகக்கோப்பை தொடரில் பேட்டிங் மற்றும் பவுலிங் ஆகிய துறைகளில் கபில் அபாரமாக செயல்பட்டார் என்று சொல்லியே தீர வேண்டும். குறிப்பாக பைனலில் அவர் பிடித்த விவ் ரிச்சர்ட்ஸ் கேட்ச் யாராலும் மறக்க முடியாது. அவர் எந்த வகையான சூழலிலும் அசத்தும் அளவுக்கு கேப்டன்ஷிப் செய்யும் பன்முகத்தன்மை கொண்டவர்.

மேலும் ஒரு வீரர் கேட்ச் தவற விட்டாலோ அல்லது மிஸ் பீல்ட் செய்தாலோ அவருடைய முகத்தில் புன்னகை நிலைத்திருக்கும். அதுவே அவருடைய ஒரிஜினல் கூல் கேப்டனாக காட்டுகிறது. அந்த வகையில் அந்த உலக கோப்பையை நாங்கள் வென்றதை வார்த்தைகளால் விவரிப்பது மிகவும் கடினமாகும்.

இருப்பினும் அந்த சமயத்தில் இருந்த மகிழ்ச்சி ஒரு டூத் பேஸ்ட் விளம்பரத்திற்கு போஸ் கொடுக்கும் அளவுக்கு இருந்தது என்று சொல்லலாம். ஏனெனில் அனைத்து இந்திய வீரர்களின் முகத்திலும் புன்னகை இருந்த அந்த தருணத்தை இப்போது திரும்பிப் பார்த்தாலும் நெஞ்சை தொடுவதாக அமையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்