ரோகித், விராட் இல்லை...என்னுடைய சாதனையை அந்த 2 இந்திய வீரர்கள் தகர்க்க வாய்ப்பு உள்ளது - லாரா நம்பிக்கை

டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்சில் லாரா ஆட்டமிழக்காமல் 400 ரன்கள் குவித்ததே டெஸ்டில் தனிநபர் அதிகபட்ச உலக சாதனையாக உள்ளது.

Update: 2024-07-12 02:21 GMT

டிரினிடாட்,

வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த முன்னாள் வீரர் பிரையன் லாரா மகத்தான பேட்ஸ்மேன்களில் முதன்மையானவராக போற்றப்படுகிறார். ஷேன் வார்னே, முத்தையா முரளிதரன், மெக்ராத், போன்ற உலகின் அனைத்து தரமான டாப் பவுலர்களுக்கு சவாலை கொடுத்த பெருமைக்குரியவர். குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 400 ரன்கள் அடித்து அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த வீரராக அவர் படைத்த உலக சாதனை யாராலும் உடைக்கப்படாமல் இருந்து வருகிறது.

இந்நிலையில் தம்முடைய சாதனையை உடைக்க வீரேந்தர் சேவாக், ஜெயசூர்யா, கிறிஸ் கெய்ல் நெருங்கியதாக பிரையன் லாரா கூறியுள்ளார். இருப்பினும் அவர்களால் முடியாத நிலையில் வரும் காலங்களில் ஜெய்ஸ்வால், சுப்மன் கில் ஆகிய இந்திய கிரிக்கெட் வீரர்கள் தம்முடைய சாதனையை உடைக்க வாய்ப்புள்ளதாக லாரா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:-"என்னுடைய காலத்திலேயே சில வீரர்கள் அதற்கு சவால் கொடுத்தனர். அல்லது குறைந்தது 300 ரன்கள் கடந்து நெருங்கினார்கள். வீரேந்திர சேவாக், இன்சமாம்-உல்-ஹக், ஜெயசூர்யா, கிறிஸ் கெய்ல் ஆகியோரை சொல்லலாம். அவர்கள் மிகவும் அதிரடியாக விளையாடக்கூடிய வீரர்கள்.

அதேபோல தற்போது எத்தனை வீரர்கள் அப்படி ஆக்ரோஷமாக விளையாடுகின்றனர்? குறிப்பாக இங்கிலாந்து அணியில் ஹாரி ப்ரூக், ஜாக் கிராலி. ஆனால் இந்திய வீரர்களான யசஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில் ஒருவேளை அவர்கள் சரியான சூழ்நிலையை கண்டறிந்தால் அந்த இருவருமே என்னுடைய சாதனையை உடைப்பார்கள்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்