பாகிஸ்தானில் உள்ள பந்துவீச்சாளர்கள் போன்று உலகில் வேறு எந்த அணியிலும் இல்லை - ஷாகித் அப்ரிடி

உலகிலேயே மற்ற நாடுகளை விட பாகிஸ்தானின் பவுலிங் மிகவும் வலுவாக இருப்பதாக ஷாகித் அப்ரிடி தெரிவித்துள்ளார்.

Update: 2024-05-29 09:06 GMT

கராச்சி,

கிரிக்கெட் ரசிகர்களை எதிர்பார்ப்புக்கு உள்ளாக்கி இருக்கும் 9-வது டி20 உலகக்கோப்பை தொடர் இன்னும் சில தினங்களில் (ஜூன் 1 -ம் தேதி) தொடங்க உள்ளது. இதில் பாகிஸ்தான் அணி பாபர் அசாம் தலைமையில் களமிறங்குகிறது. இந்த தொடரில் மிக முக்கியமான ஆட்டங்களில் ஒன்றான இந்தியா - பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் ஜூன் 9-ம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில் உலகிலேயே மற்ற நாடுகளை விட பாகிஸ்தானின் பவுலிங் லைன் அப் மிகவும் வலுவாக இருப்பதாக அந்த அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி தெரிவித்துள்ளார். அதனால் இந்தியா போன்ற எதிரணிகள் இம்முறை தங்களை வீழ்த்துவது கடினம் என்று தெரிவிக்கும் அவர் இது குறித்து பேசியது பின்வருமாறு:-

"இந்த உலகில் இருக்கும் எந்த கிரிக்கெட் அணியிலும் இது போன்ற வலுவான பந்து வீச்சாளர்கள் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. எங்களுடைய வேகப்பந்து வீச்சாளர்கள் நிறைய திறமைகளை கொண்டுள்ளனர். சொல்லப்போனால் பெஞ்சில் அமர்ந்திருக்கும் அப்பாஸ் அப்ரிடி கூட நிறைய திறமையை கொண்டுள்ளார். அது போன்ற திறமை கொண்டுள்ள வீரர்கள் உலகக்கோப்பையில் உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்களுக்கு எதிராக நன்றாக செயல்படுவார்கள்.

இம்முறை ஷதாப் கான் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட வேண்டும். அவர் பந்து வீச்சில் அசத்திய போதெல்லாம் பாகிஸ்தான் வென்றுள்ளது. அவருடைய கடந்த கால போட்டிகளை நான் பார்த்துள்ளேன். அவருடன் நேற்று நான் விரிவாக விவாதித்தேன். தற்போது அவர் மோசமான காலத்தில் இருக்கிறார் என்பது எனக்கு தெரியும். எனவே அவரைப் போன்ற வீரர்களுக்கு நான் உத்வேகத்தை கொடுக்க முயற்சித்தேன். அதை பின்பற்றி பயிற்சிகளை எடுக்கும்போது அவர் வித்தியாசமாக செயல்படுவதை உங்களால் பார்க்க முடியும்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்